இலங்கையில் அரசியல் குழப்பநிலை உருவான பின்னர் அமெரிக்காவும் ஜப்பானும் பல மில்லியன் டொலர்கள் பெறுமதியான நிதியுதவியை இடைநிறுத்தியுள்ளன என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்

ரொய்ட்டர் செய்திச்சேவைக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

என்னை பிரதமர் பதவியிலிருந்து நீக்கியதன் காரணமாக இலங்கையில் ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்து கேள்விகள் எழுந்துள்ளதால் ஜப்பானும் அமெரிக்காவும் பல மில்லியன் டொலர்கள் அபிவிருத்தி நிதியை இடைநிறுத்தியுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் குறி;த்து சர்வதேச சமூகத்தின் மத்தியில் கரிசனைகள் காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய நிலை குறித்து உலகநாடுகள் மிகவும் உணர்வுபூர்வமான நிலைப்பாட்டை கொண்டுள்ளன, நாடுகள் மத்தியில் கரிசனைகள் காணப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெருந்தெருக்கள் அபிவிருத்தி மற்றும் காணி நிர்வாகத்தில் முன்னேற்றம் காணும் நடவடிக்கைகளிற்காக 500 மில்லியன் டொலர்களை வழங்கயிருந்த அமெரிக்கா அதனை தற்போது இடைநிறுத்தியுள்ளது என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

புகையிரத அபிவிருத்தி திட்டமொன்றிற்காக 1.4 பில்லியன் டொலர்களை வழங்குவதற்கு முன்வந்த ஜப்பான் அதனை வழங்குவதை தற்போது இடைநிறுத்தியுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டி எனது பெரும்பான்மையை நிருபிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மக்கள் போராட்டங்களை எனது கட்சி விஸ்தரிக்கவுள்ளது எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாங்கள் மாற்றுவழிகள் குறித்து ஆராய்ந்து வருகின்றோம்,பொதுமக்களை பெருமளவில் அணி திரட்டவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.