(எம்.மனோசித்ரா)

எதிர்கட்சியில் இருந்து கொண்டு ஆளும் கட்சியை பாதுகாப்பதற்கு பதிலாக அரசாங்கத்துடன் இணைந்து மக்களுக்கு சேவை செய்வது சிறந்ததாகும் என கிழக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் மஹிந்தராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்குவதற்காக நான் அரசாங்கத்துடன் இணையவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல்வேறு சந்தப்பங்களில் எனக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். அவரின் செயற்பாடுகளில் திருப்தி அடைந்துள்ளேன். 

அத்தோடு கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்காக குறுகிய காலத்தில் பாரிய அபிவிருத்திகளையும் முன்னெடுப்பதற்காகவே கிழக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சர் பதவியை ஏற்றுள்ளேன்.

இந் நிலையில் துரோகி என ஏனையோரை விமர்சிப்பவர்கள் முதலில் தங்களை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அமைச்சுப் பதவிக்காக விலை போவதாக எம்மை விமர்சிப்பவர்கள் அதனை நிரூபிக்க வேண்டும். அவ்வாறு என்னை விமர்சித்தவர்கள் மீது வெகு விரைவில் வழக்கு தொடரவுள்ளேன் என்றார்.