ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிடவேண்டுமென பலர் விருப்பம் வெளியிட்டுள்ளனர் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில்( புளும்பெர்க்) கோத்தபாய ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார்.

எனக்கு அமைச்சராவது குறித்து ஆர்வம் இல்லை, ஆனால் பலர் நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவேண்டும் என விருப்பம் வெளியிட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

விசேட அதிரடிப்படையினரின் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் அவர் இதனை தெரிவித்தார், அவர் பேட்டியளித்த இடத்தில்  கோத்தபாய ராஜபக்ச இராணுவத்தில் கடமையாற்றிய காலத்தில் எடுக்கப்பட்ட படங்களும் மீண்டும் பிரதமராகியுள்ள அவரது சகோதரரின் படங்களும் காணப்பட்டன என சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ள.

முக்கிய அமைச்சுகளிற்கும் பதவிகளுக்கும் குடும்ப வாரிசுகளை நியமிக்கும் பாரம்பரியத்தை கொண்ட நாட்டிற்கு இதுவொன்றும் புதியவிடயமல்ல ஆனால் ராஜபக்ச குடும்பத்தவர்கள் மீண்டும் இலங்கை அரசியலில் ஆதிக்க செலுத்துவதற்கு தயாராவதை இது புலப்படுத்துகின்றது என புளும்பேர்க் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் உள்நாட்டு மோதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள கோத்தபாய ராஜபக்ச உள்நாட்டு மோதல் கொழும்பையும் அதன் புறநகர்பகுதிகளையும் நாளாந்த கார்க்குண்டுகள்,தற்கொலை படை தாக்குதல்கள் மூலம் போர்க்களமாக மாற்றியிருந்ததை சர்வதேச அவதானிகள் பலர் விளங்கிக்கொள்ளவில்லை எனவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் மிகப்பெரும் பகுதியை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர் படையினருக்கு சமமான ஆயுதங்களை வைத்திருந்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ யுத்தம் என்பது சிறந்த விடயமில்லை அது அருவருப்பான விடயம், என தெரிவித்துள்ள கோத்தபாய நாங்கள யுத்தத்தை உருவாக்கவில்லை மகிந்த உருவாக்கவில்லை மகிந்த ராஜபக்ச அதனை முடித்துவைத்தார் என குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசாங்கம் மீண்டும் கடன்களிற்காக சீனாவை நாடும் என தெரிவிக்கப்படுவதை அவர் நிராகரித்துள்ளார்.

நாங்கள் எந்த நாட்டிற்கும் சார்பாக நடக்கவில்லை,இலங்கையுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் எவருடனும் நாங்கள் இணைந்து பணியாற்ற விரும்புகின்றோம்,நாங்கள் சர்வதேச அமைப்புகளுடனும் இணைந்து பணியாற்றவிரும்புகின்றோம் ஆனால் அவர்கள் நியாயமாக நடந்துகொள்வில்லை என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.