வனரோபா சுற்றாடல் பாதுகாப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்ததாக புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் “ஜலநிம்ன - ஹரித அரண” மரநடுகை நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று முற்பகல் வரலாற்று முக்கியத்துவமிக்க சோமாவதி புண்ணிய பூமியில் ஆரம்பமானது. 

விசேட தாவர இனத்தைக்கொண்ட ஆற்றங்கரை ஓரங்கள் தனியான வன பகுதியாக அடையாளப்படுத்தப்படுகின்றது. ஆற்று நீரில் மண் கலப்பதை தவிர்த்து, மண்ணை பாதுகாப்பதற்கு பங்களிப்பது ஆற்றங்கரை ஓரங்களிலுள்ள தாவர இனங்களின் முக்கிய சுற்றாடல் பயனாகும். மரநடுகை மூலம் இத்தகைய சூழலை பாதுகாப்பது “ஜலநிம்ன - ஹரித அரண” நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கமாகும்.

சோமாவதி வளாகத்தில் உள்ள பூங்காவில் புங்க மரக்கன்றொன்றை நாட்டி ஜனாதிபதி இந்த நிகழ்ச்சித் திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். 

புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் தலைவர் அசேல இத்தவெல, பணிப்பாளர் நாயகம் சீ்.ஏச்.ஜீ.ஆர்.சிறிவர்த்தன, மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சரத் சந்திரசிறி விதான ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து சோமாவதி புண்ணிய பூமிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி சமய கிரியைகளில் ஈடுபட்டார்.

சோமாவதி விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய பஹமுனே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரர் சமய கிரியைகளை நடத்தி ஜனாதிபதிக்கு ஆசீர்வாதம் வழங்கினார்.

சோமாவதி புண்ணிய பூமியில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தரும் மகா சங்கத்தினர் மற்றும் பக்தர்களுக்கு தங்குமிட வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக சோமாவதி புண்ணிய பூமியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மூன்று மாடி ஓய்வு மண்டபத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்.

சென்ரல் பெயாரிங்க்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சுதத் தென்னகோன் அவர்களினதும் நிர்வாக சபையினதும் நிதி பங்களிப்பின் மூலம் சுமார் 30 மில்லியன் ரூபா செலவில் இந்த ஓய்வு மண்டபம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.   

முன்னாள் அமைச்சர் சிறிபால கம்லத் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.