அம்பாறை மாவட்ட கரையோரத்தின் அக்கரைப்பற்று – பொத்துவில் ஏ4 பிரதான சாலையில் அறுபதாம் கட்டை எனுமிடத்தில் கனகர்கிராம தமிழ்மக்களின் காணிமீட்புப்போராட்டம் தொடங்கி 80தினங்களைக்கடந்துள்ளது.இன்றுடன் 80வது தினத்தில் அங்கு விஜயம் மேற்கொண்டு சமகாலநிலைவரம் தொடர்பில் கண்ணோட்டம் செலுத்தினேன்.

நேற்றிரவு அந்தப்பகுதியில் கனமழை பொழிந்திருக்கிறது.ஆனால் அந்த கனமழைக்குமத்தியிலும் குளிர்கூதலுக்கும் மத்தியிலும் அவர்கள் போராட்டத்தைத் தொடர்வது அவர்களது வைராக்கியத்தை கட்டியம்கூறி நிற்கிறது.அரசஅதிபரின் உத்தரவின் பேரில் அவர்களிடம்  பல தரவுகள் திரட்டப்பட்டுள்ளன.அந்த ஆவணங்கள் யாவும்  கடந்த 16ஆம் திகதி பொத்துவில் பிரதேசசெயலாளரிடம் கையளிக்கப்பட்டது. 

அவற்றில் உள்ள சில குறைநிறைகளை தற்போது சரிசெய்துவருதாக பேராட்டக்குழுவின் தலைவி றங்கத்தனா தெரிவித்தார். அதுவரை பொறுத்திருக்கிறோம். ஆனால் எமது போராட்டம் எமது சொந்தக்காணிபெறும்வரை தொடரும் என்றார்.

இதுவரை பாராளுமன்ற உறுப்பினர் தொடக்கம் பல அரசியல்வாதிகள் சமுகசேவையாளர்கள் எனப்பலரும் வந்து கலந்துரையாடி பல உறுதிமொழிகளையும்  அளித்துள்ளார்கள். வனத்துறை உயரதிகாரியும் அரசஅதிபர் கிழக்கு காணி ஆணையாளர் இக்காணியை மீளளிக்க உறுதிகூறியுள்ளநிலையிலும் போராட்டம் தொடர்கிறது.

அவர்கள் இரவுபகலாக அந்த காட்டுப்பகுதியின் வீதியோரத்தில் முகாமிட்டு இரவுபகலாக தங்கியிருந்து போராட்டத்தை நடாத்திவருகின்றனர். அந்தமுகாம் தற்போது இரண்டாகியுள்ளது. பால்கொடுக்கும் குழந்தைகள் தொடக்கம் தள்ளாடும் வயோதிபர்கள் வரை அங்கு பங்கேற்றுள்ளனர். 

அரசஅதிபரின் விஜயம்!

அங்கு இறுதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க கிழக்குமாகாண காணி ஆணையாளர் தர்மகுமார உதவிஆணையாளர் ரவிராஜ் உள்ளிட்ட குழுவினர் வந்து பார்த்து கலந்துரையாடிய விடயங்களையிட்டு மக்கள் நம்பிக்கைகொண்டவர்களாகவுள்ளனர்.

அதாவது இங்கிருக்கக்கூடிய 30வீட்டுத்திட்டத்திலிருந்தவர்களுக்கு எந்தப்பிரச்சினையுமில்லை. அதனை விடுவிக்கலாம். ஆனால் அதைவிட மொத்தமாக 278குடும்பங்கள் வாழ்ந்துள்ளன.

அவற்றை உறுதிப்படுத்துவதற்கு சில ஆவணங்கள் தேவை. பெர்மிட் அல்லது அங்கிருந்ததற்கான பக்கத்துகாணிச்சொந்தக்காரர்களின் பெர்மிட் அங்குவாழ்ந்தபோது எடுத்த பிறப்பு இறப்பு விவாகச்சான்றிதழ்களின் பிரதிகள் அல்லது புனர்வாழ்வுக்காக பெற்றுக்கொண்ட கடன் உதவி சான்றிதழ் அல்லது வாக்காளர் அட்டை  இப்படி ஏதாவது ஒரு ஆவணத்தையாவது காட்டுகின்ற பட்சத்தில் அதனை பரிசீலனைசெய்து காணிவழங்க நடவடிக்கைஎடுக்கப்படவிருக்கிறது.