மழைக்காலங்களில் ஃபங்கல் டீஸீஸ் எனப்படும் பூஞ்சை நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிடும். சிலருக்கு இந்த ஃபங்கல் டீஸீஸ் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவிடக்கூடும். 

அதிலும் படர்தாமரை எனப்படும் பூஞ்சை நோய் தொற்றுநோயாக பரவி, அவர்களின் தோற்றத்தை விகாரமாக்கிவிடும். சிலருக்கு இத்தகைய தொற்று நோய் சருமத்தை மட்டும் பாதிக்காமல் தோலின் உட்பகுதிக்கும் சென்று பாதிப்பை உருவாக்கும். 

பூஞ்சை நோயை ஏற்படுத்தும் கிருமிகள் சில தருணங்களில் சிலருக்கு அவர்களின் இதயம், நுரையீரல், சிறுநீரகம், உணவுக்குழாய், பெருங்குடல் போன்ற முக்கிய உறுப்புகளில் பரவி உயிர் கொல்லி நோயாகவும் மாறிவிடும். இத்தகைய ஆபத்தை ஏற்படுத்தும் பூஞ்சை நோய் குறித்த விழிப்புணர்வை மக்கள் இது வரை போதிய அளவிற்கு பெறவில்லை என் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

குழந்தைகள், கர்ப்பிணிகள், ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள், சுவாசிப்பதில் கோளாறு உள்ளவர்கள், மண்ணில் பணியாற்றுபவர்கள் போன்றவர்கள் பூஞ்சை நோயால் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், இவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஆரோக்கிய சீர்கேட்டை களைவதற்காக வழங்கப்படும் மருந்து மற்றும் மாத்திரைகள் நோயாளிகளின் உடலிலுள்ள நோயெதிர்ப்பு சக்திக்கு எதிராக பணியாற்றும் வாய்ப்பு இருப்பதால், வைத்தியர்கள் வீரியம் குறைவான மருந்துகளையே இதற்காக தற்போது பரிந்துரை செய்கிறார்கள். அதே போல் இருபத்தைந்திற்கும் மேற்பட்ட பூஞ்சை நோய்கள் இருப்பதாகவும் கண்டறிந்திருக்கிறார்கள்.

அதனால் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை கவனத்துடன் அளிக்கவேண்டியதிருக்கும். அதே போல் தொடர் கண்காணிப்பும் அவசியமாகும். அத்துடன் நோயாளிக்கு பூஞ்சை நோயைப் பற்றிய விழிப்புணர்வு இருந்தால் தான் இதிலிருந்து முழுமையாக குணமாக இயலும்.

டொக்டர் தீப்தி

தொகுப்பு அனுஷா.