பதினெட்டு சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கம் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்போவதில்லை என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுசெயலாளர் டி. டி. வி. தினகரன் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது,

‘உச்சநீதிமன்ற தீர்ப்பால் தென் மாவட்ட பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 

பட்டாசு விவகாரம் குறித்து தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். சி.பி.ஐ. விசாரணைக்கு எதிராக மேல்முறையீடு செய்ததது போல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பட்டாசு வழக்கிலும் மேல் முறையீடு செய்யவேண்டும். 

முதல்வரை யாரும் மிரட்டவில்லை. அப்படி மிரட்டியிருந்தால் அவர் தவறு செய்துள்ளார் என்று தானே அர்த்தம். பதினெட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்க வழக்கில் மேல்முறையீடு செய்யமாட்டோம். 

தேர்தலைச் சந்திப்போம். இடைத் தேர்தலில் இருபது தொகுதிகளிலும் அ.ம.மு.க. வெற்றிப் பெறும். அப்போது மண் குதிரை யார் என்பதை மக்கள் நிரூபிப்பார்கள். எங்கு தேர்தல் நடந்தாலும் மக்கள் நிரூபிப்பார்கள். இருபது தொகுதிகளிலும் அ.தி.மு.க.விற்கு டெபாசிட் கூட கிடையாது. ஆர் கே நகர் தேர்தல் போல் தோல்வியடைவர்.’ என்றார்.