(ரொபட் அன்டனி)
புலிகளுக்கு நாம் பணம் வழங்க வில்லை. எங்களுக்கு அவர்களுடன் எந்த தொடர்பும் இருக்கவில்லை. புலிகள் இவ்வாறு பணம் வாங்கினார்கள் என்று கூறுவது தமிழ் மக்களுக்கு செய்கின்ற பாரிய அகௌரவமாக இருக்கின்றது என்று முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் மஹிந்த ராஜபக் ஷவின் சகோதரருமான பஷில் ராஜபக் ஷ தெரிவித்தார்.
வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்டார். செவ்வியின் முழு விபரம் வருமாறு;
கேள்வி: தற்போது என்ன செய்துகொண்டிருக்கின்றீர்கள்?
பதில்: நாங்கள் தற்போது 50 வீத அரசியலுக்கும் 50 வீதம் வழக்குகளுக்காகவும் காலத்தை கடத்திக்கொண்டிருக்கின்றோம். அரசியல் ரீதியில் வேட்டையாடப்பட்டுக்கொண்டிருக்கின்றோம் என்று கூறலாம்.
கேள்வி: அதாவது உங்கள் ஆட்சியின்போது எவ்விதமான தவ றும் செய்யவில்லை என்று கூறுகின்றீர்களா?
பதில்: தவறு செய்வது என்பதும் அரசியல் தவறுகளை செய்வது என்பதும் இரண்டு விடயங்களாகும். அரசியல் ரீதியான குறைபாடுகள் என்பது இடம்பெறலாம். இது எந்த அரசியல்வாதியிடமும் இருக்கலாம். ஆனால் இங்கு அவ்வாறு இல்லை. இங்கு என்ன நடைபெறுகின்றது என்றால் சில பேரை தெரிவு செய்து அரசியல் வேட்டையாடுகின்றனர்.
கேள்வி: நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து குறிப்பிட முடியுமா?
பதில்:நாட்டில் கடந்த வருடம் வாழ்க்கை முறையானது வீழ்ச்சியடைந்துவிட்டது. விவசாயம் வீழ்ச்சிகண்டுள்ளது. வடக்கில் மீனவர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வடக்கு மீனவர்களின் மீன்வளம் கொள்ளையடிக்கப்படும்போது அரசாங்கம் மௌனமாக இருக்கின்றது. இவ்வாறு பல வழிகளிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் சில விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதனையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைவடையும் அளவுக்கு வழங்கப்படவில்லை. அத்துடன் அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை அடிப்படை சம்பளத்தில் இணைக்கவில்லை. எவ்வாறெனினும் அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டை பாராட்டவேண்டும்.
நாட்டில் கடந்த காலங்களில் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் அவை தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. நாங்கள் ஆரம்பித்த அபிவிருத்தி திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. வடக்கு அதிவேக பாதை செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன. நாட்டின் முழுப் பொருளாதாரமும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிகண்டுவருகின்றது. பொருளாதார வளர்ச்சி வீதம் குறைவடைந்துள்ளது. வெளிநாட்டு ஒதுக்கீடு குறைவடைந்துள்ளது.
மின்சார விநியோகத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மின்சார தடை ஏன் ஏற்பட்டது? மின்சார தடை ஏற்பட்டமைக்கு நிர்வாக திறன் இன்மையே காரணமாகும். எமது நாட்டில் தேவையான மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. எனவே தடை ஏற்படவேண்டிய அவசியமில்லை. சேவையில் அர்ப்பணிப்பு இல்லாமையே இதற்கு காரணமாகும்.
இதேவேளை இந்த அரசாங்கத்துக்கு பாரிய சர்வதேச ஆதரவு காணப்படுகின்றது. இந்தியா அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆதரவை அரசாங்கம் பெற்றுள்ளமை சிறந்த விடயமாகும். ஆனால் தேவையில்லாமல் சில நாடுகளுடன் உறவை குழப்பிக்கொண்டுள்ளது.
கேள்வி: எவ்வாறான நாடுகளுடன்?
பதில்: சீனா போன்ற நாடுகளுடன் உறவு குழப்பிக்கொள்ளப்பட்டது.
கேள்வி: எனினும் பொதுவாக தற்போது சர்வதேச உறவு சிறந்ததாக உள்ளதாக கூறுகின்றீர்களா?
பதில்: அது எதிர்வரும் காலங்களில் உறவு முன்னெடுக்கப்படுவதை வைத்தே கூற முடியும். ஒரு தரப்புக்கு மட்டும் நன்மை ஏற்படும் வகையில் செயற்படக்கூடாது. ஆனால் இவ்வாறு சர்வதேச உறவு பலப்படுத்தப்பட்டமை சிறந்த விடயமாகும்.
மேலும் முதற்தடவையாக தமிழ்த் தரப்பின் பிரதிநிதியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து பயணிக்கின்றது. கடந்த காலங்களில் தேசியப் பிரச்சினையை தீர்க்க தமிழர் தரப்பு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவே இல்லை.
ஆனால் முதற்தடவையாக தமிழர்களின் உத்தியோகபூர்வ கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து பயணிக்கின்றது. இது பாரிய வெற்றியாகும். ஆனால் அதனை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் இரண்டு தரப்பும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். இது சிறந்த சமிக்ஞையாகும். கூட்டமைப்பு எதிர்க்கட்சியிலிருந்து கொண்டு முன்னெடுக்கும் வகிபாகத்தை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். எதிர் கட்சித் தலைவரென்றால் அவர் முழு நாட்டினதும் எதிர்க்கட்சித் தலைவராக இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு செயற்படவில்லை.
கேள்வி: உங்கள் அரசாங்க காலத்திலும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் பிரச்சினை காணப்பட்டது தானே ? நீங்கள் அதனை தீர்க்கவில்லையே?
பதில்:நாங்கள் இந்த விடயத்தில் தலையிட்டோம். ஆனால் கூட்டமைப்பு இந்தியாவின் சார்பாக செயற்பட்டது. தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இந்தியாவின் பக்கத்தை எடுத்தால் நாம் எவ்வாறு இந்தப் பிரச்சினைகள் குறித்து பேசுவது?
கேள்வி: உங்கள் தரப்பு புதிய கட்சியை ஆரம்பிக்கப் போவதாக கூறுப்படுகிறது. அதில் உங்கள் பங்களிப்பு என்ன?
பதில்: ஒரு விடயத்தை சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும். இன்று ஒரு தரப்பு அரசாங்கத்தை நடத்துகின்றது. பல கட்சிகள் அதற்கு ஆதரவளிக்கின்றன. எதிர்க்கட்சியான கூட்டமைப்பும் அரசாங்கத்திற்கு ஆதரவாகவுள்ளது. ஒருவகையில் கூறுவதென்றால் ஜே.வி.பி.யும் அந்தப் பக்கமே உள்ளது. இந்நிலையில் அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பும் நாட்டிலுள்ளது. அந்த மக்களுக்காக யார் குரல் கொடுப்பது? அதற்காக ஒரு அரசியல் முன்னணி அல்லது அமைப்பு தேவைப்படுகிறது. இது மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது. அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தவே இந்த புதிய அமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்படுகின்றது.
எதிர்க்கருத்தை பிரதிநிதித்துவப்படுத்தவே இந்த அமைப்பை உருவாக்குமாறு கோரப்படுகின்றது. இதில் எனது பங்களிப்பு பெரிதாக இருக்காது.
கேள்வி: நீங்கள் கூறும் அந்த அமைப்பை தற்போது உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்களா?
பதில்: மக்கள் இதனை கேட்கின்றனர். எனவே தேவையான சூழலில் இந்த அமைப்பு உருவாகும்.
கேள்வி: உங்கள் அரசாங்கத்தின் கீழிலிருந்த சிறந்த இராணுவத் தளபதி தற்போதைய பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகா நீங்கள் புலிகளுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டினை முன்வைத்திருக்கின்றார். நீங்கள் புலிகளுக்கு பணம் கொடுத்தீர்களா?
பதில்: (சிரிக்கிறார்) அதனை நான் முழுமையாக நிராகரிக்கின்றேன். புலிகளுக்கு நாம் பணம் வழங்கவில்லை. எங்களுக்கு அவர்களுடன் எந்த தொடர்பும் இருக்கவில்லை.
புலிகள் இவ்வாறு பணம் வாங்கினார்கள் என்று கூறுவது தமிழ் மக்களுக்கு செய்கின்ற பாரிய அகௌரவமாக இருக்கின்றது. தமிழ் மக்கள் 1947 ஆம் ஆண்டிலிருந்து ஒரு கொள்கை அடிப்படையிலான தீர்மானத்தில் செயற்பட்டு வந்துள்ளனர். முழு இலங்கையும் ஜே.ஆர். ஜெயவர்தனவுக்கு வாக்களித்தபோது கொப்பேகடுவவுக்கு வாக்களித்த மக்களே வடக்கிலுள்ளனர். அந்தவகையில் அவர்கள் தைரியமாக அரசியல் தீர்மானம் எடுக்கும் மக்கள். அரசியல் ரீதியில் தேர்தலை புறக்கணிப்பார்கள். வேறுவகையான முடிவுகளை எடுப்பார்கள். அவை இந்த நாட்டின் அரசியலில் இடம்பெற்ற விடயங்கள். மக்கள் விடுதலை முன்னணியும் ஒரு முறை தேர்தலை புறக்கணித்தது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தலை புறக்கணித்தது. முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்வதற்கு புலிகள் எடுத்த தீர்மானம் தவறானது எனக் கூறப்படுவதைப் போன்று 2005 ஆம் ஆண்டு தேர்தலில் வாக்களிக்காமல் இருந்தமை அவர்களின் தவறான முடிவாக இருக்கலாம். அன்று மஹிந்த ராஜபக் ஷவுக்கு சர்வதேச தொடர்பு இல்லையென்றும் யுத்தம் செய்யத் தெரியாது என்றும் புலிகள் நினைத்திருக்கலாம். கோத்தபாய ராஜபக்ஷ என ஒரு சகோதரர் இருந்தமை தெரியாமல் இருந்திருக்கலாம். அதனால் அவ்வாறு புறக்கணித்திருக்கலாம். எவ்வாறெனினும் மக்களின் தீர்மானத்தை அகௌரவப்படுத்துவது முறையல்ல.
கேள்வி: இது தொடர்பில் நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்?
பதில்: அதிகமான விடயங்களை கூறிக் கொண்டிருக்கின்றார். நான் இந்த விடயத்தை எனது சட்டத்தரணிகளிடம் ஒப்படைத்துவிட்டேன்.
கேள்வி: ஜனவரி 8 ஆம் திகதி தேர்தல் முடிவடைந்தவுடன் நீங்கள் ஏன் அமெரிக்காவுக்கு சென்றீர்கள் ?
பதில்: அது எனது தனிப்பட்ட ஒரு முடிவு. எனது பாதுகாப்பினைப் பற்றி சிந்தித்து மக்களின் தீர்ப்பிற்கு தலைசாய்த்து நான் அன்று அவ்வாறு பயணமானேன். மக்கள் எம்மை வேண்டாமென்று கூறியதனால் வெற்றி பெற்றவர்கள் சிறந்த முறையில் செயற்பட இடமளித்துவிட்டு நான் சென்றேன். இவ்வாறு இதற்கு முன்னர் பல அரசியல் தீர்மானங்களை எடுத்திருந்தனர். எனது பிள்ளைகள் மனைவி அனைவரும் அமெரிக்காவில்தான் வாழ்கின்றனர்.
மஹிந்த ராஜபக் ஷ தோல்வியுற்றதும் அலரி மாளிகையிலிருந்து மெதமுலனவுக்கு சென்றது போன்று நான் எனது குடும்பத்தாரிடம் சென்றேன். அதனைப் பலர் பல விதங்களில் அர்த்தப்படுத்தியிருந்தனர். அதில் ஏதும் குறைபாடு இருந்திருந்தால் நான் கவலையடைகின்றேன்.
கேள்வி: 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததும் நாட்டின் தேசிய பிரச்சினையை தீர்ப்பதற்கு உங்கள் அரசாங்கத்திற்கு சிறந்த சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால் அதனை நீங்கள் தவற விட்டீர்களே ?
பதில்:இல்லை இது தவறான கருத்தாகும். அரசியல் ரீதியில் தேசியப் பிரச்சினையை தீர்ப்பதற்கு தற்போது தான் வரலாற்று ரீதியான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இன்று அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்ற தமிழ்த் தரப்பு அன்று எம்முடன் இணைந்திருக்கவில்லை. அன்று நாம் இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேற்ற கடும் பாடுபட்டோம். யாரும் எமக்கு ஆதரவு வழங்கவில்லை. புலம்பெயர் மக்களும் எதனையும் செய்யவில்லை. குழப்பங்களையே ஏற்படுத்தினர். மக்களை மீள்குடியேற்றவே எங்களுக்கு இரண்டரை வருடங்கள் தேவைப்பட்டன. அன்று அரசியல் தீர்வைப் பற்றி பேசுவதை விட மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கே காலம் தேவையாக இருந்தது. அந்த இடத்திலிருந்தே கூட்டமைப்பினர் எமக்கெதிராகவே செயற்பட்டு வந்துள்ளனர். பேச்சுவார்த்தை நடத்தக் கூட அவர்கள் இணங்கவில்லை. தற்போது இந்த அரசாங்கத்திற்கு வழங்கும் ஆதரவை கூட்டமைப்பு அன்று எமக்கு வழங்கியிருந்தால் நாமும் தேசியப் பிரச்சினைக்கு தீர்வனைக் கண்டிருப்போம்.
கேள்வி:இதனைப் பொறுப்புடன் கூறுகின்றீர்களா ?
பதில்: பாரிய பொறுப்புடன் கூறுகின்றேன். நாங்கள் இதற்கு முயற்சித்தோம். ஐ.நா.வில் தமிழ் மொழியில் பேசிய தலைவர் எமது மஹிந்த ராஜபக் ஷவே ஆவார். இவ்வாறு தற்போதுகூட யாரும் இல்லை. இன்று வடக்கு மக்களுக்கு 700 ஏக்கர் காணிகளை மீள் கொடுக்கின்றனர். நாங்கள் 7000 ஏக்கர் காணிகளை மீள வழங்கினோம் என்பதை பொறுப்புடன் கூறுகின்றேன். ஆனால் தவறான கண்னோட்டத்தை வெளிக்காட்டினர். எனவே அன்று அவர்கள் ஒத்துழைப்புடன் செயற்பட்டிருந்தால் இன்று இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்கும். எமது பக்கத்திலும் குறைபாடுகள் இருந்தன. நாம் காணிகளை கொடுத்துவிட்டு வந்த பின்னர் பாதுகாப்பு தரப்பினர் மீண்டும் அவற்றை பெற்றுக் கொண்ட சந்தர்ப்பங்களிலும் இருந்தன.
கேள்வி: உங்களது அரசாங் கம் முஸ்லிம் மக்கள் விடயத்திலும் முறையற்ற விதத்தில் நடந்துகொண்டதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
உங்கள் தரப்பு தோல்விக்கு முஸ் லிம் மக்கள் மீதான கெடுபிடிகளே காரணம் என்றும் கூறப்படுகின்றதே?
பதில்: முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவே நாங்கள் முயற்சித்தோம். ஆனால் நாங்கள் தீர்த்த பிரச்சினைகளும் தற்போது மீண்டும் குழம்பிக்கொண்டிருக்கின்றன. அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேர்மையான முறையில் தமது மக்களுக்காக செயற்பட்டு வந்தார். ஆனால் அப்போதைய மன்னார் ஆயர் அதற்கு இடையூறாக இருந்து வந்தார். பல கவலையான சம்பவங்கள் இடம்பெற்றன அந்த மக்கள் அதிகளவில் ஐ.தே.க ஆட்சிக் காலத்தில கஷ்டப்பட்டனர். புலிகளினாலும் கஷ்டங்களை எதிர்கொண்டனர். முஸ்லிம் நாடுகளுடன் மஹிந்த ராஜபக் ஷ வுக்கு சிறந்த தொடர்புகள் காணப்பட்டன. இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஆதரவு வழங்கினர். எமது காலத்தில் பிரதான முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் எம்முடன் இருந்தனர். ஆனால் சில அமைப்புக்கள் உருவாகியுதுடன் முஸ்லிம் மக்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன. அமைப்புக்கள் உருவாக்கப்படுவதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் அந்த அமைப்புக்களின் ஒருசில செயற்பாடுகளை நாங்கள் எதிர்கின் றோம். மஹிந்த ராஜபக் ஷவும் அவற்றை எதிர்த்தார். அந்த அமைப்புக்கள் செய்த சில நடவடிக்கைகள் முஸ்லிம் மக்கள் மத்தியில் பாரிய பிரச்சினைகளாக உருவெடுத்தன. அவற்றிற்கு ஊடகங்களும் தேவையற்ற பிரசித்தங்களை வழங்கின.
கேள்வி: அப்போதைய அரசாங்கம் ஒரு சில இடங்களில் சில நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம் அல்லவா?
பதில்: இந்த விடயத்தில் பாரிய குறைபாடுகள் இருந்தன என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். முஸ்லிம் மக்கள் சந்தேகப்படுகின்ற வகையில் பல சம்பவங்கள் இடம்பெற்றன. கிரிஸ் பேய் சம்பவங்களும் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவையென காட்டப்பட்டன. நாம் சற்று அக்கறையுடன் செயற்பட்டிருக்கலாம் என ஏற்றுக் கொள்கின்றேன். இன்று அரசாங்கத்திலிருக்கின்ற சிலர் அன்று எமது பக்கத்திலிருந்து கொண்டு சில நடவடிக்கைகள் எடுப்பதற்கு இடமளிக்கவில்லை. மஹிந்த ராஜபக் ஷ 290 பள்ளிவாசல்களை மீண்டும் திறந்து வைத்தார். பல பள்ளிவாசல்களை மறுசீரமைப்பு செய்தார். கூரகல பள்ளிவாசல் விவகாரத்தை நிவர்த்தி செய்ய நாம் முயற்சித்தோம். ஆனால் அவ்வாறான சம்பங்களில் முஸ்லிம் மக்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டனர். ஆனால் முஸ்லிம் மக்களின் உண்மையான பிரச்சினையை தீர்ப்பதற்கு மஹிந்த ராஜபக் ஷ மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். எனினும் தவறான பிரசாரங்கள் காரணமாக நிலைமை மாற்றமடைந்தது.
கேள்வி: தற்போது புதிய அரசாங்கத்தை உருவாக்க முயற்சிக்கப்படுகின்றது. அதற்காக பாரளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்ற பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வு எவ்வாறு அமைய வேண்டுமென நீங்கள் கருதுகிறீர்கள் ?
பதில்: முதலில் பாராளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்றியுள்ளமையே சட்டவிரோதமானதாகும். தற்போதைய அரசியலமைப்பு படி அவ்வாறு செய்ய முடியாது. புதிய அரசியலமைப்பபை உருவாக்குவதற்கு 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பில் ஒரு முறைமை காணப்படுகின்றது. அதனைப் பின்பற்றாமலேயே தற்போது நடவடிக்கை எடுக்கின்றனர். தற்போதைய அரசாங்கத்திற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலமோ இரண்டில் ஒன்று பெரும்பான்மை பலமோ இல்லை. ஐ.தே.க.வுக்கு 113 ஆசனங்கள் கூட கிடைக் கவில்லை. எனவே இவர்களுக்கு புதிய அரசிய
லமைப்பை உருவாக்க மக்கள் வாக்களிக்கவில்லை. அரசியலமைப்பை உருவாக்கும் முறைமைக்கு அப்பாற்பட்டே இவர்கள் செயற்படுகின்றனர். இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெ ளிப்படுத்தவில்லை. இது தவறான முன்னுதாரணமாகும். அரசியல் தீர்வினை மக்களுக்கு வழங்குவதென்றால் அது நிலையானதாக இருக்க வேண்டும். ஆனால் இவர்கள் மேற் கொள்ளும் முறையில் தீர்வை முன்வைத்தால் அது நிலையானதாக இருக்காது. எனவே ஏற்றுக் கொள்ளப்பட்ட முறைமைக்கு அமைவாகவே இதனை செயற்படுத்த வேண்டும்.
கேள்வி: ஆனால் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை காண்பதற்கு தற்போது சிறந்த சந்தர்ப்பம் உருவாகியுள்ளது என்பதை ஏற்றுக் கொள்கின்றீர்களா ?
பதில்: நிச்சயமாக ஆம். சிறந்த சந்தர்ப்பம் தற்போதுதான் கிடைத்துள்ளது. அதனை செய்து முடிக்க வேண்டும். இதனை தவற விட்டால் அது பெரியதொர் அநியாயமாகும். நாங்கள் அனைவரும் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவோம். ஆனால் அதனை சரியாக செய்ய வேண்டும். உண்மைக்கு மாறாக செயற்பட வேண்டாம். உங்களை நம்பியவர்களுக்கு பொய் செய்ய வேண்டாம். தமிழ் மக்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்
துள்ளனர். அதனை உண்மையான முறையில் நிறைவேற்றுங்கள். அரசியலமைப்பை உருவாக்க சரியான முறையில் ஏன் செயற்படாமல் இருக்கின்றீர்கள் ? தமிழ் மக்களை இன்று ஒருசிலர் காட்டிக் கொடுத்துவிட்டனர். இவ்வாறான சந்தர்ப்பம் இதற்கு முன்னர் எமக்கு கிடைக்கவில்லை. ஆனால் இவர்கள் உண்மையாக செயற்பட வேண்டும். மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்
றனர். நீண்டகால அரசியல்தீர்வினை வழங் கும் எண்ணம் இவர்களுக்கில்லை. அத்துடன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினையும் இவர்கள் மாற்ற மாட்டார்கள். அப்படியே அரசியல் தீர்வினை கொடுத்தாலும் அது உறுதியானதாக இருக்காது.
கேள்வி : நீங்கள் ஏன் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை.
பதில்:நான் அதனை விரும்பவில்லை. எதிர்காலத்திலும் பாராளுமன்ற உறுப்பினராக எண்ணமில்லை.
கேள்வி: உங்களது ஆட்சியின் இறுதிக்காலத்தில் இந்தியாவுடனும், அமெரிக்காவுடனும் முரண்பாடுகள் ஏற்பட்டதா?
பதில்:சில முரண்பாடுகள் ஏற்பட்டன. அது எமது பக்க குறைபாடுகளாகவும் இருக்கலாம்.
கேள்வி: 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 அம் திகதி பிரபாகரன் உயிருடன் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பில் உங்களுக்கு ஏதாவது தகவல் தெரியுமா?
பதில்: அது தொடர்பில் எனக்கு ஒன்றும் தெரியாது.
கேள்வி:புலிகள் சரணடைய வருவ தாக சர்வதேச மட்டத்தில் உங்களூடாக யாராவது தகவல் அனுப்ப முயற்சித்தனரா ?
பதில்: சில விடயங்கள் அவ்வாறு இடம்பெற்றதாக தகவல்கள் உள்ளன. அவை சிக்கலுக்குரிய கேள்விகளாக இருப்பதனால் நான் பதிலளிப்பதிலிருந்து விலகுகின்றேன்.
கேள்வி: இலங்கை அரசாங் கம் உள்ளக விசாரணையினை மேற்கொள்ள வுள்ளதாக கூறுகின்றது. இது தொடர்பாக ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேர ணையில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெற வேண்டுமென கூறப்பட்டுள்ளது. ஆனால் அரசாங்கம் அதனை மறுத்துள்ளது. உங்களின் பார்வை எவ்வாறு உள்ளது ?
பதில்:இதில் எமது அரசியலமைப்புக்குட் பட்டு பாதிக்கப்பட்ட நம்பிக்கை கொள்ளும் வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதே எனது கருத்தாகும். எமது அரசியலமைப்பினை மீறி வெ ளிநாட்டு நீதிபதிகள் பங்கெடுப்பது முறைமையல்ல. அது இறைமையினை பாதிக்கும் .ஆனால் விசாரணை முறைமை நம்பிக்கைக்குரியதாக இருக்க வேண்டும். இது உண்மையில் சிக்கலுக்குரிய விடயம்தான். அரசாங்கம் இதில் சரியான தீர்மானம் எடுத்து செயற்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் திருப்பதி அடைவதே இங்கு முக்கியமானதாகும். எமது நீதித்துறையில் வெ ளிநாட்டுத் தரப்பினர் தலையிடுவது சரியல்ல. ஆனால் தொழில்நுட்ப உதவிகளைப் பெறலாம். எமது இறைமை பாதுகாக்கப்பட வேண்டும். இது முழு நாட்டினதும் பிரச்சினையாகும். இதில் சர்வதேசத்தை திருப்திப்படுத்தாமல் பாதிக்கப்பட்ட மக்களை திருப்திபடுத்த வேண்டும்.
கேள்வி: 2014 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி வரை பொது வேட்பாளர் யார் என்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லையா ?
பதில்:எமக்கு வதந்திகள் போன்ற தகவல் கிடைத்தது. ஆனால் நாம் நம்பவில்லை. சிலர் வந்து கூறினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM