மாத்தறை – ஊறுபொக்க பகுதியில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தோடு உயிரிழந்தவரின் மனைவி உட்பட நால்வர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் மாத்தறை குற்றப் புலனாய்வு பிரிவினரால் பலாங்கொடை மற்றும் வலஸ்முல்ல பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

பஸ்கொட பிரதேச செயலகத்தின் ஊழியர் ஒருவர் அகுரஸ்ஸ வத்த என்ற இடத்தில் வைத்து கடந்த 22ஆம் திகதி காலை 9.25 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

படுகொலை செய்யப்பட்டவர் அகுரஸ்ஸ வத்த – வலஸ்முல்ல பகுதியில் வசித்து வந்த 44 வயதான சமிந்த தயாரத்ன என்பவராவார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த குறித்த நபர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பித்து சென்றுள்ளார் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையிலிருந்து தெரிய வந்தது.

பொலிஸார் தொடர்ந்து மெற்கொண்ட விசாரணைகளில் உயிரிழந்தவரின் மனைவிக்கும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவருக்கும் இடையில் காதல் தொடர்பு இருந்தமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றம் இரண்டு துப்பாக்கி ரவைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர்கள் மொரவக நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.