(நா.தினுஷா, இரோஷா வேலு)

மக்களின் ஆணையை மீறி செயற்படும் ஜனாதிபதி உடனடியாக பாராளுமன்ற கூட்டி பெரும்பான்மையை நிரூபித்தால் உடனடியாக அரசிலிருந்து விலகி எதிர்கட்சிக்கு செல்ல தயார் என ஐக்கிய தேசிய கட்சியில் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 

உடனடியாக பாராளுமன்றை கூட்டுங்கள் என்ற ஏகோபித்த வேண்டுகோளுடன் இன்று அலரி மாளிகை முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாரிய போராட்டத்தில் கலந்துகொண்டு  உரை நிகழ்த்துகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாட்டின் ஜனநாயகத்தை நிலை நிறுத்தும் அதியுச்ச நிறுவனமாகவே பாராளுமன்றம் பார்க்கப்படுகின்றது. அந்த  அதிகாரத்தை பாதுகாக்கவே நாம் தற்போது போராடுகின்றோம். ஆனால் நாம் இல்லாத போது இந்த அதியுன்னத வரத்தை உடைத்து ஜனாதிபதி பாராளுமன்றைத்தை ஒருபுறம் ஒதுக்கி சர்வாதிகாரியாக செயற்பட்டுள்ளார். 

இதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்க போவதில்லை. பாராளுமன்றம் கூடி தீர்வு வரும் வரையில் நாம் இந்த அலரி மாளிகையை ஜனநாயகத்தை நிலைநிறுத்த செயற்படபோகும் நிலையமாகவே பயன்படுத்தப் போகின்றோம் என்றார்.