ஆயிரம் ரூபா சம்பள உயர்வை கோரி தொடர் போராட்டங்களில் ஈடுப்பட்டுவரும் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நேற்று முன்னெடுத்திருந்தனர்.அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் பத்தனை சந்தியில் ஆரம்பமான குறித்த போராட்டத்தில், சுமார் 500ற்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். 

இதன்போது அவர்கள் சம்பள உயர்வை கோரும் வகையான பல வாசகங்கள் எழுதிய சுலோகங்களை ஏந்திய வண்ணம் தங்களது போராட்டத்தை முன்னெடுத்தனர்.மேலும், இப்போராட்டத்தில் கலந்துக்கொண்ட மாணவர்கள் தாம் இப்போராட்டத்தை முன்னெடுத்ததற்கான நோக்கம் குறித்து கூறுகையில்,

எமது தாய், தந்தையர்கள் தோட்டத்தில் பணிபுரிந்து அவர்கள் பெரும் சம்பளத்தின் ஊடாகவே மேல் படிப்பினை நாம் கற்று வருகின்றோம். 

இந்த நிலையில் எமது தாய், தந்தையினர் சம்பள உயர்வாக ஆயிரம் ரூபாவை கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளோம்.

இவர்களின் போராட்டம் வெற்றிப்பெற வேண்டும் என்பதற்காகவும்,எங்கள் கல்வியில் நாங்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காகவும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தோம் என மாணவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.