(எம்.ஆர்.எம்.வஸீம்)

புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவு திட்டத்தை தயாரிப்பதற்காகவும் பாராளுமன்றத்தில் ஆசனங்களை ஒதுக்குவதற்காகவுமே பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் பாராளுமன்றம் அங்கிகரித்தாலே புதிய அரசாங்கம் தொடரும். அதனால் ரணில் விக்ரமசிங்க அலரிமாளிகையில் இருந்துகொண்டு வெளியேறமாட்டேன் என தெரிவிப்பது அந்த பதவிக்கே அகௌரவமாகும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

நாட்டில் தற்போது இடம்பெற்றிருப்பது சட்டப்பிரச்சினையோ அரசியலமைப்புக்கு முரணான செயலே அல்ல. மாறாக அரசியல் அதிகார மாற்றமாகும். நாங்கள் தற்போது அதிகார மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதால் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக வாக்களிக்க இருக்கும் பெரும்பாலானவர்களுக்கு சுதந்திரமளித்திருக்கின்றோம். ரணில் விக்ரமசிங்க அதிகாரத்தில் இருக்கும் நிலையில் பாராளுமன்றத்தில் அவருக்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய தேசிய கட்சியில் இருக்கும் ரணில் எதிர்ப்புக்குழுவுக்கு அந்த சுதந்திரம் கிடைப்பதில்லை. 

அதனால்தான் அரசியல் அதிகாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி பாராளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக இருப்பவர்களுக்கு வாக்களிக்கும் சுதந்திரத்தை வழங்குவதன்மூலம் எங்களுக்கு தேவையான பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். இது அரசியல் அதிகாரமுறையாகும். இதில் எந்த தவறும் இல்லை எனவும் தெரிவித்தார்

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.