ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நான்கு சதங்களை தொடர்ச்சியாக விளாசித் தள்ளியுள்ள இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் சாதனையை இந்திய அணித் தலைவர் விராட் கோலி இன்று இடம்பெறவுள்ள போட்டியின் போது சமநிலைப்படுத்துவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை இழந்துள்ள நிலையில் தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இந்த ஒருநாள் தொடரில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளிலும் இந்திய அணித் தலைவர் விராட் கோலி மூன்று சதங்களை பூர்த்தி செய்துள்ளார். அதன்படி முதல் போட்டியில் 140 ஓட்டங்களையும், இரண்டாவது போட்டியில் 157 ஓட்டங்களையும், மூன்றாவது போட்டியில் 107 ஓட்டங்களையும் பெற்றார்.

இதன் மூலம் 47 ஆண்டுகால ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக மூன்று சதங்களை விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

இதேவேளை இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கிண்ணத் தொடரில் பங்களாதேஷிக்கு எதிராக 105 ஓட்டங்களையும், இங்கிலாந்துக்கு எதிராக 117 ஓட்டங்களையும், அவுஸத்திரேலியாவுக்கு எதிராக 104 ஓட்டங்களையும், ஸ்கொட்லாந்துக்கு எதிராக 124 ஓட்டங்களையும் அடித்துள்ளார்.

இதன்மூலம் சங்கக்கார ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக 4 சதங்களை விளாசி சாதனை புரிந்துள்ளார்.

இந் நிலையில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், விராட் கோலி நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளிலும் சதம் அடித்துள்ளார். 

இதற்கிடையே இன்று மும்பையில் இடம்பெறவுள்ள மேற்கிந்திய அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியிலும் அவர் சதமடித்தால் தொடர்ச்சியாக 4 சதங்களை பெற்ற குமார் சங்கக்காரவின் சாதனையை சமநிலை செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.