எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதி இந்தியத் தலைநகர் டில்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் அந்த அழைப்பினை ட்ரம்ப் புறக்கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டொனால்ட் ட்ரம்பை இந்திய குடியரசு தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இவ் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே இந்தியா அழைத்து வந்தது. இது குறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பு செயலாளர், ‘இந்தியாவிடமிருந்து குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற்க ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது உண்மைதான். ஆனால், அது குறித்து இன்னும் எதுவும் முடிவு செய்யப்படவில்லை' என்று தகவல் தெரிவித்திருந்தார். 

இந் நிலையில் இது தொடர்பில் டெல்லியில் இருக்கும் அமெரிக்க தூதரகத்திடம் வினவியபோது, ‘அதிபரின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து வெள்ளை மாளிகை தான் பதில் தர வேண்டும்' என்று சொல்லிவிட்டது. 

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திடமிருந்தும் இந்த விடயம் குறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை.