அ.தி.மு.கவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சியில் இணையவேண்டும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஒ பன்னீர்செல்வமும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியும் அழைப்பு விடுத்துள்ளார்கள்.இது தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.

‘பதினெட்டு சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்க வழக்கில் உயர் நீதிமன்றத் தீர்ப்பு கட்சியின் தொண்டர்களுக்கு புதிய உற்சாகத்தை அளித்திருக்கிறது. 

அதிமுகவினருக்கும் தமிழக மக்களுக்கும் புத்துணர்வை தந்திருக்கிறது. 

ஜெயலலிதாவின் கனவுகளை நனவாக்கும் இயக்கமாக விஸ்வரூபம் எடுத்து அரசியல் எதிரிகளை அழிக்கும். 

அதனால் கட்சியிலிருந்து சில தவறான வழிநடத்துதலால் பிரிந்து சென்றவர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோர் உருவாக்கிய மக்கள் இயக்கத்தில் மீண்டும் இணையவேண்டும். 

சிறுசிறு மனக்கசப்புகளால் மாற்று பாதையில் பயணிக்கச் சென்றவர்கள் மீண்டும் இணையவேண்டும்.வேறுபாடுகளை புறந்தள்ளிவிட்டு ஒன்றுபட்டு உழைக்கும் இயக்கத்திற்கு திரும்ப வேண்டும்.

நீர் அடித்து நீர் விலகாது என்பது முதுபெரும் தமிழ் பழமொழி அல்லவா..? உயர்நீதிமன்ற தீர்ப்பின் யதார்த்தினை புரிந்து மாற்று பாதையில் சென்றோர் கட்சிக்கு திரும்புங்கள்.’ என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள்.