புதிய பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு சர்வதேச சமூகம் தனது ஆதரவை வழங்கவேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சர்வதேச சமூகம் வேறு ஒரு நபரிற்கும் அரசாங்கத்திற்கும் ஆதரவளிக்க முயன்றது இதன் காரணமாக என்ன நடைபெற்றது என்பதை அது பார்த்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச சமூகம் நிலைமை மோசமடைவதற்கு அனுமதிக்க கூடாது மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவை வழங்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாங்கள் தற்போது நாட்டை பாதுகாப்பதற்காகவும் அபிவிருத்தி செய்வதற்காகவும் புதிய அரசாங்கத்தை அமைப்போம் புதிய அமைச்சர்களை நியமிப்போம் என தெரிவித்துள்ள கோத்தபாய ராஜபக்ச மக்கள் விரும்பியதை அவர்களிற்கு வழங்குவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளமை பொதுமக்கள் மத்தியிலும் முதலீட்டாளர்கள் மத்தியிலும் நம்பிக்கையை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ள கோத்தபாய ராஜபக்ச நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு வர்த்தக சமூகத்தினரும் முதலீட்டாளர்களும் முன்வரவேண்டும் அச்சமின்றி முதலீடு செய்யவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

நான் பாதுகாப்பு செயலாளர் பதவியை ஏற்கமாட்டேன்,எந்த பொறுப்பையும் ஏற்காமலே நாட்டிற்கு சேவைசெய்வேன் என அவர் தெரிவித்துள்ளார்.