(இராஜதுரை ஹஷான்)

நியாயமான போராட்டங்களை முன்னிலைப்படுத்தி எவ்விதமான அரசியல் தலையீடுகள் மற்றும் ஆதரவு இல்லாமல் போராட்டத்தினை முன்னெடுத்த பெருந்தோட்ட இளைஞர்களின் போராட்டம் வரவேற்கத்தக்கது  என   கூட்டு எதிரணியினர் தெரிவித்துள்ளனர்.தங்களின் பிரதிநிதிகள் தமக்கு தேவையில்லை  என்பதை அவர்கள் பகிரங்கப்படுத்தி விட்டனர். 

ஆட்சி மாற்றத்தின் பின்னர் மலையக மக்களின் சம்பள பிரச்சினைக்கு சிறந்த தீர்மானம்  பெற்றுக் கொடுக்கப்படும்.

இதேவேளை, அரசாங்கத்திற்கு  எதிராக குரல் எழுப்பி போராட்டங்களை முன்னெடுக்கும் தார்மீக  உரிமை மக்கள் விடுதலை முன்னணியினருக்கு கிடையாது. தமது அரசியல் இருப்பினை தக்கவைத்துக்கொள்ள  ஊழல் மோசடிகளுக்கு ஆதரவு வழங்கிய  ஜே. வி. பியினர் விகாரைகளில்  சென்று பாவமன்னிப்பு பெற்றுக் கொள்ள வேண்டும்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில்  இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான காஞ்சன விஜய சேகர , இந்நிக அனுருத்த ஹேரத் , பி.பிசானக  ஆகியோர்  கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர்கள் மேற்கண்டவாறு   தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் குறிப்பிடுகையில்,

ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவுடனே மக்கள் விடுதலை முன்னணியினர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். 

கடந்த செப்டம்பர் மாதம் பொதுஜன பெரமுனவினரது போராட்டத்தினை தவிர்க்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டது.

அன்று  செயற்படுத்திய  முறைமைகள் எவற்றையும்  ஜே. வி.பியின் விடயத்தில் செயற்படுத்தவில்லை.   

மலையக இளைஞர்கள்  பலருக்கு பாடம் புகட்டும் விதமாக மேற்கொண்ட போராட்டத்தில்  பலரது முகத்திரைகள் கிழிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தனர்.