தற்போது கலைக்கப்பட்டுள்ள வடமாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் நீண்டநாட்களாக எதிர்பார்க்கப்பட்ட தனது புதிய கட்சியை ஆரம்பிக்கும் அறிவிப்பை கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணத்தின் நல்லூரில் நடைபெற்ற கூட்டத்தில்வைத்து செய்திருக்கிறார். அதன் பெயர் தமிழ் மக்கள் கூட்டணி.கடந்த சில வருடங்களாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் குமுறிக்கொண்டிருந்த முரண்பாடுகளும் பிளவும் இப்போது வெட்டவெளிக்கு வந்துவிட்டது.இது வடக்கு அரசியலில் மாத்திரமல்ல தெற்கு அரசியலிலும் விளைவுகளை ஏற்படுத்தும்.இலங்கையில் சர்வஜனவாக்குரிமையை அடிப்படையாகக்கொண்ட ஜனநாயக அரசியல் தொடங்கிய காலம் முதல் இன்று வரை ஏதாவது ஒரு அரசியல் கட்சியே வடக்கில் எப்போதும் ஆதிக்கம் செலுத்திவந்திருக்கிறது.
சுதந்திரத்துக்கு முந்தைய வருடங்கள் தொடக்கம் 1950 களின் நடுப்பகுதி வரை ஜீ.ஜீ.பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியே வடக்கில் செல்வாக்கச் செலுத்தியது.1950 களின் முற்பகுதி தொடக்கம் 1980 களின் நடுப்பகுதி வரை முதலில் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தினாலும் பிறகு அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தினாலும் தலைமாதாங்கப்பட்ட இலங்கை தமிழரசு கட்சி அங்கு ஆதிக்கம் செலுத்தியது.1980 களின் முற்பகுதி தொடக்கம் 2009 வரை ஆயுதமேந்திய தமிழ் இயக்கங்கள் பிரதானமாக விடுதலை புலிகள் ஆதிக்கம் செய்தனர்.விடுதலை புலிகள் தோற்கடிக்கப்பட்டதற்குப் பின்னர் பழைய தமிழரசு கட்சியில் எஞ்சியிருந்தவர்களையும் சில முன்னாள் ஆயுதக்குழுக்களையும் உள்ளடக்கியதாக அமைக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு செலவாக்கு நிலையில் இருந்துவந்தது. ஒரு தசாப்த காலம் வடக்கு அரசியலில் ஆதிக்கம் செலுத்திய பிறகு தமிழ் தேசிய கூட்டமைப்பு இப்போது வாக்குறுதிகளைக் காப்பாற்றவில்லை என்று கடுமையான விமர்சனங்களுக்குள்ளாகியிருக்கிறது.
2015 பாராளுமன்றத் தேர்தலுக்கும் 2018 உள்ளூராட்சி தேர்தல்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் பிரதான தமிழ்ப் பகுதிகளான யாழழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்குகளில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் காங்கிரஸ் இரு உள்ளூராட்சி சபைகளை அதன் சொந்தத்தில் வென்றெடுத்தது.ஒன்று பருத்தித்துறை நகரசபை, மற்றது சாவகச்சேரி நகரசபை.வேறு பல உள்ளூராட்சி சபைகளில் பெருமளவு ஆசனங்களை அக்கட்சி கைப்பற்றியது.விக்னேஸ்வரன் தலைமையிலான அதிருப்திக்குழுவின் வேட்பாளர்களுக்கு பெருமளவுக்கு தமிழ் காங்கிரஸின் கீழ் இடமளிக்கப்பட்டது. முக்கியமான உள்ளூராட்சியான யாழ்ப்பாண மாநகரசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 16 ஆசனங்களையும் தமிழ் காங்கிரஸ் 13 ஆசனங்களையும் கைப்பற்றியிருந்தன.டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 10 உறுப்பினர்களின் ஆதரவுடனேயே கூட்டமைப்பினால் அதன் உறுப்பினர்களில் ஒருவரை மேயராக நியமிக்கமுடிந்தது.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான அரசியல் சக்திகளின் நிழல் தலைவரான விகனேஸ்வரன் பிரசாரத்தில் கலந்துகொள்ளாமலேயே தமிழ் காங்கிரஸினால் கூட்டமைப்பின் வாக்குத் தளத்திற்குள் அத்தகைய ஊடுருவல்களைச் செய்யக்கூடியதாக இருந்தது.உள்ளூராட்சி தேர்தல்களின்போது தமிழ் காங்கிரஸுக்கு ஆதரவாக விக்னேஸ்வரன் குரலைக் கொடுத்ததற்கான எந்தச் சான்றும் இல்லை.மகிந்த ராஜபக்ச அளவுக்கு விக்னேஸ்வரன் ஜனவசியமான தலைவராக இல்லாதபோதிலும் கூட தமிழ் காங்கிரஸின் செயற்பாடுகள் உள்ளூராட்சி.தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மகிந்த ராஜபக்ச பிரசாரம் செய்யாமலேயே பெற்ற வெற்றியை ஒரளவுக்கு ஒத்திருந்ததாக வர்ணிக்கலாம்.
உள்ளூராட்சி தேர்தல்களில் காண்பித்த செல்வாக்கை மேலும் கட்டியெழுப்பி உற்சாகத்துடன் செயற்படுவதற்கு விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியினால் இயலுமாக இருந்தால் 2020 நடுப்பகுதியில் வரக்கூடிய அடுத்த பாராளுமன்றத்தேர்தலில் வடக்கையும் கிழக்கையும் பிரதிநிதித்துப்படுத்தப்போகின்ற பெரிய தமிழ்க்குழுவாக அதுவே வெளிக்கிளம்புவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றனஅடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக விக்னேஸ்வரன் தலைமையிலான குழு அவரின் வழிகாட்டலின் கீழ் அதன் செல்வாக்கை வெளிக்காட்டுவதற்கு இன்னொரு தேர்தல் தேவைப்படுகிறது.உண்மையில் எதிர்பார்க்கப்படுவது மாகாணசபைத் தேர்தலே.ஆனால் , மாகாணசபைத் தேர்தலைச் சந்திப்பதற்கான வாய்ப்பு அவர்களுக்கு கொடுக்கப்படாவிட்டால், விக்னேஸ்வரன் வடக்கு , கிழக்கில் தமிழ் மக்கள் தன்னுடனேயே நிற்கின்றனர் என்பதைக் காட்டுவதற்காக ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்க நிர்ப்பந்திக்கப்படக்கூடும்.
அதனால் விக்னேஸ்வரன் தலைமையிலான குழு நாடி நிற்கின்ற மாகாணசபைத் தேர்தல் வாய்ப்பைக் கொடுக்காமல் விடுவது புத்திசாலித்தனமானதல்ல.அது குறித்து அரசாங்கம் ஒன்றுக்கு இரண்டு தடவை சிந்திக்கவேண்டும்.ஏனென்றால், மாகாணசபைத் தேர்தல் இப்போதைக்கு நடத்தப்படாத பட்சத்தில் அந்த குழுவினருக்கு இருக்கக்கூடிய மாற்றுத்தெரிவு விக்னேஸ்வரனை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவதேயாகும்.மாகாணசபைத் தேர்தல்கள் தாமதிக்கப்பட்டால் அதை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஆட்சேபிக்கப்போவதில்லை.ஏனென்றால் அந்தத் தேர்தலில் தங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டு வடக்கு மாகாணசபை கைநழுவுமென்றால் 2009 மேயில் பிரபாகரனின் மறைவுக்குப் பிறகு வடக்கு அரசியலில் தங்களால் செலுத்தக்கூடியதாக இருந்த ஆதிக்கத்தை அடுத்த பாராளுமன்த் தேர்தலில் இழக்கவேண்டியேற்படும் என்று அவர்கள் நினைக்கக்கூடும்.
ஜனாதிபதி தேர்தலில் விக்னேஸ்வரன் வேட்பாளராக நிற்கும்பட்சத்தில் தமிழ் வாக்குகளைச் சிதறடித்து அவர் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் வெற்றிபெறுவதற்கான சூழ்நிலையைத் தோற்றுவிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வடக்கு, கிழக்கு எங்கும் சென்று குற்றஞ்சாட்டினால் அது தமிழ் மக்கள் மத்தியில் எடுபடப்போவதில்லை.ஏனென்றால் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்குமாறு கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களைக் கேட்டபோது கூட்டமைப்பினர் அவர் வெற்றிபெற்றால் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண வழிபிறக்கும் என்று வாக்குறுதி அளித்தார்கள்.ஆனால் எதுவும் நடந்தபாடாக இல்லை.
உண்மையில் இதன் காரணத்தினாலேயே யாழ்ப்பாணத்திலும் ம்டக்களப்பிலும் தமிழர்கள் மத்தியில் கூட்டமைப்பின் வாக்குகளில் வீழ்ச்சி ஏற்பட்டது. தமிழரசு கட்சியில் பல தசாப்தங்களாக மாறுதல்கள் பெரிதாக ஏற்பட்டுவிடவில்லை என்பதை 2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தல் வெளிக்காட்டியது.1977 பாராளுமன்றத் தேரதலில் ' இன்று ' தமிழ் மக்கள் தங்களுக்கு வாக்களித்தால் ' நாளை' தமிழ் ஈழம் அவர்களுக்கு கிடைக்கும் என்றபாணியிலேயே தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர்கள் பிரசாரம் செய்து வாக்குக் கேட்டார்கள்.பிறகு என்ன நடந்துமுடிந்தது என்பது எம்மெல்லோருக்கும் தெரியும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றமுடியாமல் போனதன் விளைவான சூழ்வினையையே இன்று மீண்டும் எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது.கூட்டமைப்புக்கு எதிரானவர்களின் செல்வாக்கு அதிகரிக்கிறது.வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் தமிழ் ாக்காளர் ஒருவருக்கு பிமாண்டமாக அணிதிரண்டு வாக்களித்தால் தமிழர்கள் எத்தகைய உணர்வைக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உலகிற்கு காட்டமுடியும் என்ற வாதத்தின் அடிப்படையில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் விக்னேஸ்வரன் போட்டியிடக்கூடிய சாத்தியம் இருக்கிறது.அவ்வாறு நடைபெறுமானால் 1977 க்குப் பிறகு தமிழ் தலைவர் ஒருவர் அவ்வாறு வாதிட்டு தேர்தல் களத்தில் நிற்கும் முதல் சந்தர்ப்பமாக இது அமையும். எனவே மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பை விஞ்சுவதற்கு மாகாணசபை தேர்தலை ஒரு சந்தர்ப்பமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வடக்கில் மேலெழும் புதிய அரசியல் சக்திகளுக்கு அந்த வாய்ப்பு கொடுக்கப்படவில்லையானால் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நல்லாட்சி அரசாங்கத்தின் வேட்பாளரைப் பாதிக்கக்கூடியதாக தமிழ் வேட்பாளர் களமிறக்கப்படுவார் என்று நம்பலாம்.
அதனால், அடுத்து நடக்கப்போவது என்ன என்பதே இப்போதுள்ள கேள்வி.
அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்தி ழமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தப்போகின்றதா அல்லது மாகாணசபை தேர்தல்களை ஒத்திவைத்து ஜனாதிபதி தேர்தலில் தனக்கே பாதிப்பைத் தேடிக்கொள்ளப்போகின்றதா?
நன்றி த ஐலண்ட் - சீ.ஏ.சந்திரப்பிறேமா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM