(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

ரூபாவின் வீழ்ச்சியை கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை. அதனால் மக்கள் வாழ்க்கை சுமையை சமாளித்துக்கொள்ள நுண்கடன் திட்டங்களுக்கு செல்கின்றனர். இதனால் இன்று வடமாகாணத்தில் அநேகமான பெண்கள் கடன் செலுத்த முடியாமல் தற்கொலை செய்துகொள்கின்றனர் என மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் இன்று பாராளுமன்றத்தில் தெரிவி்த்தார்.

அரச கடன்பெறுகைக்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

 குறிப்பாக மட்டக்களப்பு, மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களிலே நுண்கடன்  வழங்கும் நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. இவர்கள் அங்குள்ள பெண்களை இலக்குவைத்து கூடிய வட்டிவீதத்தில் கடன்செலுத்தி வருகின்றனர். ஒரு நிறுவனத்திடம் பெற்ற கடனை செலுத்த மற்றுமொரு நிதி நிறுவனத்திடம் அதிக வட்டிக்கு கடன் பெறுகின்றனர். இவ்வாறு கடன் பெற்று அதனை செலுத்த முடியாத நிலையில் அந்த மாவட்டங்களில் அதிகமான தற்கொலைகள் இடம்பெற்று வருகின்றன. 

அத்துடன் நுண்கடன் திட்டத்தில் அதிக வட்டிக்கு பணம் வழங்கும் நிறுவனங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது. அத்துடன் இவ்வாறு கடன்பெற்றவர்களின் வட்டியை அரசாங்கம் பொறுப்பேற்பதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.