(ஆர்.விதுஷா)

கட்டுநாயக்க சர்வதேச  விமானநிலையத்தில் ஹெரோயின் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட பாகிஸ்தானிய தம்பதியினரை 7 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

டுபாயிலிருந்து இலங்கை நோக்கி பயணித்த  விமானத்தில் ஹெரோயின் போதைமாத்திரைகளுடன்  வந்த பாகிஸ்தானிய தம்பதியர் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 2.50 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி வெளிநாட்டு பிரஜைகள் 350 கிராம் நிறையுடைய 35  ஹெரோயின் போதை மாத்திரைகளை விழுங்கிக் கொண்டு இலங்கைக்கு வருகை தந்தமையை அடுத்து போதைப்பொருள் தடுப்பு பொலிசாருக்கு கிடைக்கபெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட் சோதனை நடவடிக்கையின் போதே மேற்படி பாகிஸ்தான் பிரஜைகள்  இருவரும்  கைது செய்யப்பட்டுள்ளனர். 

அதனை அடுத்து , சந்தேக நபர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு போதை மாத்திரைகளை வெளியில் எடுக்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட பாகிஸ்தானிய  பெண்ணின் வயிற்றிலிருந்து   45  இலட்சம்  ரூபாய் பெறுமதியான   35 ஹெரோயின் போதைப்பொருள் மாத்திரைகள் அகற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது. 

அத்துடன், சந்தேக நபர்கள்  44 மற்றும் 67 வயடைய பாக்கிஸ்தானை சேர்ந்தவர்கள் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் இன்று நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்டுள்ள  நிலையிலேயே எதிர்வரும் 7 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.