கிழக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள நிலை வடக்கிலும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதே எமது ஆதங்கம் ஆகும். எனவே, வடக்கின் முன்னாள் மாகாணசபை பிரதிநிதிகளும் கிழக்கின் முன்னாள் பிரதிநிதிகளும் இணைந்து மாகாணசபை தேர்தலை விரைவில் வடக்கு, கிழக்கில் நடத்த அழுத்தம் கொடுக்க முன்வரவேண்டியது அவசியமானதென கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கிழக்கு மாகாணசபை இப்போது ஆளுநரின் அதிகாரத்தில் சிக்கி சின்னாபின்னாமாகிக் கொண்டிருக்கிறது. நாம் மாகாண சபையின் ஆட்சிப்பீடத்தில் இருந்தபோது பல முதலீட்டுத் திட்டங்களை அறிமுகம் செய்து பல்வேறு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தினோம். ஆனால் ஆளுநர் ஆட்சிக்குள் கிழக்கு வந்ததன் பின்னர் இதுவரை அரசின் மூலமாக அங்கு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் என்ன என்பதை பார்ப்போமானால் எதுவும் இல்லை என்பதே பதிலாகும் தற்போது அங்கு எல்லாமே வியாபாரமயமாகிக்கொண்டிருக்கிறது.

இந்நிலை வடக்கு மாகாண சபைக்கும் ஏற்படக்கூடாது. எனவே வடக்கின் முன்னாள் முதல்வர் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் எம்முடன் இணைந்து மாகாணசபைத் தேர்தலை விரைந்து நடத்த அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் செயல்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவேண்டும். இதற்கு அவர்கள் தயாரா? என கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் நஸிர் அஹமட் கேள்வி யெழுப்பியுள்ளார்.

இது விடயமாக அவர் மேலும் தெரிவித்ததாவது,

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் தேர்தல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்ற விடயம் குறிப்பிடப்பட்டிருந்தமை காரணமாகவே கடந்த உள்ளுராட்சி தேர்தலின்போது கலப்புத் தேர்தல் முறைமை ஒன்று அறிமுகப்ப டுத்தப்பட்டது. 

இதன்போது  பழைய தேர்தல் முறைமை காரணமாக அதிக பணவிரயம், தகுதியற்றவர்கள் நியமனம், பொறுப்புக்கூறல் அற்ற பிரிதிநிதித்துவம், பெண்களுக்குரிய இட ஒதுக்கீடு இல்லாமை போன்ற பல விடயங்கள் சுட்டிக்காட்டப் பட்டன.

எனினும் கலப்புமுறையில் தேர்தல் நடைபெற்று முடிந்த பின்னர் ஏற்பட்டிருக்கும் நிலையை பார்க்கும்போது. பணவிரயம் முன்னரை விட 5 மடங்கு அதிகரித்திருக்கின்றது. தகுதியில்லாதவர்கள் நியமனங்கள் அதிகளவில் ஏற்பட்டுள்ளன. பெண்களுக்கு 25 சதவீத ஒதுக்கீடு என குரல் எழுப்பியபோதும். உண்மையான அரசியல் ஆர்வம்கொண்ட பெண்களின் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை கட்சிகள் தமக்கு வேண்டிய பெண்களை நியமிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஓவ்வொரு சபைகளிலும் இருப்பதற்குகூட இடமில்லாதவகையில் சபை அங்கத்தவர்களின் அதிகரிப்பு ஏற்பட்டிருக்கிறது.

இவற்றை எல்லாம் பார்க்கும்போது இம்முறைமை படுதோல்வி கண்டுள்ளது. எனவே இதனை அறிமுகம் செய்த ஜனாதிபதிதான் இதற்குப் பொறுப்புக் கூறவேண்டும். தொடர்ந்தும் கலப்புத் தேர்தல் முறைமையை மாகாணசபைத் தேர்தலிலும் திணிக்கவே அவர் விரும்புகிறார். இதனை சிறுபான்மையாராகிய நாம் ஏற்றுக் கொள்ளமுடியாது.

கிழக்கில் தற்போது நடைபெறும் ஆளுநர் ஆட்சி முறைமையை பார்க்கும்போது பெரும் அச்சம் ஏற்படுகின்றது. அங்கு அரங்கேறிக் கொண்டிருக்கும் நிலைமைகள் குறித்து எதிர்காலத்தில் நாம் சட்டரீதியான நடவடிக்கைகளை நிச்சயம் எடுப்போம். இந்நிலை வடக்கிலும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதே எமது ஆதங்கம் ஆகும்.

எனவே, வடக்கின் முன்னாள் மாகாணசபை பிரதிநிதிகளும் கிழக்கின் முன்னாள் பிரதிநிதிகளும் இணைந்து மாகாணசபை தேர்தலை விரைவில் வடக்கு,கிழக்கில் நடத்த அழுத்தம் கொடுக்க முன்வரவேண்டியது அவசியமானது என்றார்.