(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , முன்னாள் பாதுகாப்பு செயலாளர்  கோதாபாய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்யும் சதியின்  முக்கியமான சூத்திரதாரி தொடர்பில் அரசாங்கம் எவ்விதமான  நடவடிக்கைகளையும்  முன்னெடுக்கவில்லை.  கொலை சதியின் இரண்டாம் தரப்பினரான  முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் கைது செய்யப்பட்டுள்ளமை ஒரு நாடகமே என  கூட்டு எதிர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜய சேகர தெரிவித்தார். 

பிணைமுறி விவகாரத்தில் எவ்வாறு  அர்ஜுன அலோசியசை  கைது செய்து , அர்ஜுன மகேந்திரனை அரசாங்கம்   பாதுகாக்கின்றதோ அதே போன்று  நாலக சில்வாவை கைது செய்து  பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவை பாதுகாக்கின்றது.

  அமைச்சரவையில் றோ அமைப்புடன் தொடர்புப்பட்டதாக குறிப்பிடப்படுபவர்களின்  விடயத்தில்   பாராளுமன்ற உறுப்பினர்   விஜயகலா மகேஷ்வரனின்  விவகாரத்தில் செயற்பட்டதை போன்றே   அரசாங்கம் செயற்பட வேண்டும்  எனவும் தெரிவித்தார்.

நெலும்மாவத்தையில் உள்ள  பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில்  இன்று வெள்ளிக்கிழமை  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.