மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி முன்னெடுத்து வருகின்ற போராட்டத்திற்கு கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஆசிரிய மாணவர்கள் ஆதரவு தெரிவித்து போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

கலாசாலையில் முன்பாக இன்று வெள்ளிக்கிழமை காலை கவனயீர்ப்பு போராட்ட மொன்றை மேற்கொண்டிருந்தனர். மலையகத் தோட்ட தொழிலாளர்கள் ஆயிரம் ரூபா சம்பளம் கோரி தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் இப்போராட்டத்திற்கு நாட்டின் பல இடங்களிலிருந்து பல்வேறு தரப்பினர்களும் ஆதரவுகளை தெரிவித்து போராட்டங்களிலும் ஈடுபட்டிருக்கின்றனர்.

இத்தகைய நிலையிலேயே ஆசிரியர் கலாசாலை ஆசிரிய மாணவர்களும் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து கலாசாலை பிரதான வீதியில் ஒன்றுகூடி " எங்கள் தேயிலை தேசத்தையும் நல்லாட்சிக்குள் கொண்டு வா" இந்தக் கூட்டம் பணத்திற்காக வந்த கூட்டம் அல்ல மலைய மக்களின் உரிமைக்காக வந்த கூட்டம்" நாட்டில் நாள் தோறும் ஏறுது விலைவாசி நம் வாழ்வைக்க காக்க ஆயிரம் ரூபா சம்பளம் கேட்பதில் தவறு ஏது நீ யோசி-? நாட்டில் ஏறுது விலைவாசி சம்பளத்தைக் கூட்டித்தரமுடியாத நீ யோசி? இலங்கைக்கே அழகு தரும் மலையகம் எம் வாழ்வு மட்டுமேன் அலங்கோலம்" தேயிலைச் செடிக்கு உரமாகும் எம்மவரை மீட்க நாளாந்தம் ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்கு " மலையகத் தமிழர் நிலை கண்டும் மனமிரங்கவில்லையா...? உழைப்புக்குக் கூலி கேட்கின்றோம் உனக்கேன் இது புரியவில்லை. உதிரத்தை உரமாக்கும் உயிர்களுக்காகப் போராடுவோம்" நீங்கள் குடிப்பது தேனீர் அல்ல மலைய மக்களின் உதிரமே...! தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை சுரண்டாதே... போன்ற பதாதைகளை கையில் ஏந்திய வாறு போராட்டத்தை மேற்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.