(இராஜதுரை ஹஷான்)

"எமக்கான உணவு  உற்பத்திகளை நாமே உற்பத்தி செய்துக் கொண்டு தன்னிறைவு பொருளாததாரத்தினை முன்னெடுப்பதே தேசிய அரசாங்கத்தின்  நோக்கமாக காணப்படுகின்றது" என  விவசாயத்துறை அமைச்சர்  மஹிந்த அமரவீர,  விவசாயத்துறை  பிரதியமைச்சர்  அங்கஜன் இராமநாதன் ஆகியோர் தெரிவித்தனர்.

விவசாயத்துறை அமைச்சில் நேற்று  இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில்  கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அமைச்சர்கள் மேற்கண்டவாறு  தெரிவித்தனர்.

மேலும் குறிப்பிடுகையில்,

"இது வரையில் விவசாய உற்பத்திகள் தொடர்பில் விவசாய அமைச்சு பிறிதொரு நிறுவனத்துடன் ஒன்றினைந்தே விவசாயம் தொடர்பிலான விளிப்புணர்வு மற்றும்  கண்காட்சிகளை முன்னெடுத்தது இம்முறை தனித்தே விவசாய துறை அமைச்சு  விவசாய மேம்பாடு தொடர்பிலான கண்காட்சி  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ்  டிசம்பர் மாதம்  11ம் திகதி தொடக்கம் 16ம் திகதி வரை பண்டாரநாயக ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம் பெறவுள்ளது.

இம்மாநாட்டில் தேசிய உற்பத்திகள் மற்றும் பிற நாட்டு  உற்பத்தி சார் தொழினுட்பங்கள் காட்சிப்படுத்தப்படும். நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளின் உற்பத்திகளுக்க புதிய வழிமுறையினை  ஏற்படுத்திக் கொடுப்பதே இந்த கண்காட்சியின்  இலக்காக காணப்படும். 

எமக்கான உற்பத்திகளை நாமே உற்பத்தி செய்துக் கொண்டால் பாரிய நிதி சேமிக்கப்படுவதுடன், மக்களின் வாழ்வாதாரமும் முன்னேற்றமடையும் உணவு உற்பத்திகளில் தன்னிறைவு அடைந்த நாடாக  இலங்கையினை மாற்றியமைப்பதே அரசாங்கத்தின் நோக்கம்"  என்றனர்.