பாடசாலைகளுக்குள் இடம்பெறுகின்ற ஒரு போட்டிப் பரீட்சையாக தரம் – 5 புலமைப் பரிசில் பரீட்சை இன்று மாறிக் காணப்படுகின்றது. இதற்காக எம் மாணவர்களும், பெற்றோர்களும் இரவு பகலாக பல்வேறு கஷ்டங்களைச் சுமந்து கொண்டு ஒரு இயந்திரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்று பொது நிர்வாக முகாமைத்துவம் மற்றும் சட்ட ஒழுங்கு அமைச்சின் ஒருங்கிணைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்  ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

 வை.எம்.எம்.ஏ.பேரவையின்  அட்டாளைச்சேனை கிளையின்  ஏற்பாட்டில் அதன் தலைவர் எம்.ஐ.எம்.றியாஸ் தலைமையில் ”வித்துகளுக்கு விருது வித்தகர்களுக்கு வாழ்த்து” எனும் தொனிப் பொருளில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வு நேற்று மாலை மீனோடைக்கட்டு அல் சக்கி மண்டபத்தில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில்  பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது பாடசாலை வலயத்தில் முதலிடம் பெறவேண்டும் என்ற சிந்தனையில் பாடசாலை சமூகத்தினரும், தனது பிள்ளை தேசிய ரீதியாகவோ அல்லது மாவட்டத்திலோ முதலிடம் பெறவேண்டும் என்ற சிந்தனையில் பெற்றோர்களும், ஆசிரியர்களும் இரவு பகல் பாராது செயற்பட்டு வருகின்றனர். இவை இரண்டுக்கும் நடுவில் எமது சின்னஞ் சிறுசுகள் பல கஷ்டங்களை எதிர்கொண்டு இருபக்கமும் அகப்பட்டு தத்தளிக்கின்றனர்.

இவ்வாறு பரீட்சையை எதிர்கொண்டதன் பின்னர் அந்தப் பரீட்சை பெறுபேறுகள் வரும்வரை  நிம்மதியற்றவர்களாக பாடசாலை சமூகத்தினரும், பெற்றோர்களும் காணப்படுகின்றனர். ஆனால் பெறுபேற்றின் மூலம் ஓரிரு புள்ளிகளினால் தனது சித்தியை தவறவிட்டோம் என்ற மன உளைச்சலுக்கு சில மாணவர்களும், பெற்றோர்களும் உள்ளாகிவிடுகின்றனர். 

இதில் சில மாணவர்கள் அதைத் தாங்கும் சக்தியற்றவர்களாக மாறி தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு சென்றுவிடுகின்றனர். அந்தளவுக்கு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அற்ற ஒரு பரீட்சையாக இந்தப் பரீட்சை காணப்படுகின்றது என்றார்.

இந்நிகழ்வில் கல்விமான்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கௌரவிக்கப்பட்டு, சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கி  கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.