(எம்.நியூட்டன், ரி.விரூஷன்)

"தமிழ் மக்களுக்கு உயிர்ப்பையும், வெற்றியையும் பெற்றுக் கொடுப்பதற்கு சீ.வி.விக்கிணேஸ்வரன் பயணிக்கும் புதிய அரசியல் பயணத்திற்கு தமிழினம் ஒன்றாக தோளோடு தோள் நிற்க முன் வர வேண்டும்" என தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

வடக்கு மாகாண முன்னால் முதலமைச்சர் சீ.வி.விக்கிணேஸ்வரனது எதிர்கால அரசியல் தொடர்பாக அறிவிக்கும் மக்கள் கூட்டமானது தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் யாழ்.நல்லூர் நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் இடம்பெற்ற போது சிறப்புரைகளை வழங்கிய தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களே மேற்படி அழைப்பு விடுத்துள்ளனர்.

இங்கு சிறப்புரையாற்றிய இணைத் தலைவர்களின் ஒருவரான த.வசந்தராஜா,

"நாங்கள் கிழக்கில் இருந்து வந்திருக்கின்றோம். வடக்கையும், கிழக்கையும் சட்டம் பிரித்து வைத்திருக்கின்றது. இருந்தாலும் கிழக்கில் வாழும் மக்களும், வடக்கில் வாழும் மக்களும் ஒன்றோடு ஒன்று உள்ளத்தால் இணைந்துள்ளார்கள்.

சட்டத்தால் பிரித்து வைத்துள்ள வடக்கையும், கிழக்கையும் இணைத்து தரக்கூடிய இணைத்து தர போராடக்கூடிய ஒர் தலைவனின் முன்னால் நாம் இருக்கின்றோம். உரிமைக்காக உரத்து குரல்கொடுக்கின்ற அபிவிருத்தி வேண்டாம் எமக்கான உரித்து கிடைத்தால் அபிவிருத்தி அடைந்து காட்டுவோம் என கூறுகின்ற தலைவன் முன்னால் இருக்கின்றோம்.

இன்று வடக்கும், கிழக்கும் இணைவது சாத்தியமில்லை என்றும், சமஷ்டியே சாத்தியமில்லை என்றும் கூறுகின்றார்கள். இல்லையென்றால் இல்லையென்றும் முடியாது என்றால் முடியாதென்றும் அர்த்தமில்லை. இல்லையென்பதை ஆம் என்று சொல்ல வைக்கவும், முடியாது என்பதை முடித்து வைக்கவும், அவரோடு தோலோடு தோல் நின்று போராட தமிழினம் ஒன்றாக முன்வர வேண்டும்.

திரளாக வடக்கு, கிழக்கு மக்களும் வெளியில் இருக்கும் அரசியல் கழகங்களும் கட்சிகளும், சீ.வி.விக்கிணேஸ்வரனது புதிய பாதையில் செல்வதற்கு ஒன்றாக வர வேண்டும். அதனூடாக தமிழினதுக்கு உயிர்ப்பையும் வெற்றியையும் பெற்றுக்கொடுப்போம்." என்றார்.

இதேவேளை இங்கு சிறப்புரையாற்றிய யாழ்.பல்கலைகழக சட்ட விரிவுரையாளர் சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் தெரிவிக்கையில்,

"தமிழ் மக்கள் பேரவையின் எதிர்காலம் என்பது தமிழ் மக்கள் தமிழ் தேசிய வாதத்தோடு நிற்பதாக இருந்தால் நாளாந்தம் அவர்கள் எதிர்கொண்டு வருகின்ற பிரச்சனைகளுக்கு பதில் சொல்லத்தக்க வகையில் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.

தமிழ் தேசிய வாத முறமைக்குள் நின்றுகொண்டே இதனை செய்ய வேண்டும். புதிதாக தேச கட்டுமான முயற்சியில் ஈடுபடலாம். அதனை எதிர்கால மாகாண சபை செய்ய வேண்டும். அதே போன்று போர்க்குற்ற விசாரணை, இனப்படுகொலை தொடர்பான விசாரணை போன்ற விடயங்களில் நாங்கள் எங்களினுடைய நிலைப்பாட்டில் தெளிவாக இருக்க வேண்டும். இதற்கான ஆதாரங்களை சர்வதேச நியமத்திற்கு அமைவாக திரட்ட வேண்டும்.

எங்களினுடைய தேவைகள் தொடர்பில் ஒதுக்கப்பட்ட தேசங்களுடன் சேர்ந்து அகில உலக ரீதியில் எங்களினுடைய கோரிக்கையை முன்வைக்க வேண்டும். அதனை செய்ய வேண்டிய தேவையும் அதற்கு தலமைத்துவம் வழங்க கூடிய இடத்தில் தமிழர்கள் இருக்கின்றார்கள்.

தமிழ் மக்கள் பேரவையும், தமிழ் மக்களும் தீர்க்கமான முடிவெடுக்க வேண்டிய காலம். தமிழ் தேசிய அரசியலில் மாற்றுச் சிந்தனை என்பது தமிழ் தேசிய அரசியலில் சரியான பாதையில் கொண்டு சென்றுள்ளது. அந்த வகையில் இன்று முதலமைச்சர் (முன்னாள்) அவருக்கு இருக்க கூடிய மரியாதை மாற்று அரசியலை தமிழ் மக்களை பிரதான அரசியலாக மாற்றுகின்ற சந்தர்ப்பமாகும்.

இச் சந்தர்ப்பத்தில் தூற்றுபவர்களும், தலையில் வைத்து ஆடுபவர்களும் இருப்பார்கள். இந்த இரண்டு தரப்பினரையும் அவதானம் செலுத்த வேண்டும்." என்றார்.

இதேவேளை தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களின் ஒருவரான வைத்திய கலாநிதி பூ.லக்ஷமன் கருத்து தெரிவிக்கையில்,

"ஒரு சமூக இயக்கமாக தமிழ் மக்கள் பேரவையானது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் இக்கட்டான நேரத்தில் மக்கள் மயப்படுத்தப்பட்ட தமிழ் தேசிய கொள்கை வழியான தமிழ் தேசிய இயக்கம் மக்களின் விழிப்புனர்வினால் உருவாக்க கூடிய தேர்தல் அரசியலை முன்னிலைப்படுத்தாத பரந்துபட்ட மக்கள் இயக்கமே எமக்கு அவசியமாகும்.

ஒற்றுமை என்பது கொள்கையின்பாற்பட்டதாக அதன் மேல் கொண்ட அர்ப்பனிப்பின்பாற்பட்டதாக இருக்க வேண்டும் என்பதே எமது வலியுறுத்தலாகும்.

இனத்தின் நலனை கருத்தில் கொண்டு, எம் இனத்தின் பெயரால் நடாத்தும் அர்ப்பணிப்பை கருத்தில்கொண்டு, தமிழ் தேசத்தின் நலனை கருத்தில் கொண்டு, இன்று எம் இனம் நிற்கும் சூழலை கருத்தில் கொண்டு கொள்கையின்பால் அனைவரும் ஒன்றினைய வேண்டும்." என்றார்.