இந்து நாளிதழின் கொழும்பு செய்தியாளர் மீரா சிறீனிவாசனிற்கு எதிராக முன்வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

அமைச்சரவை கூட்டத்தில் இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ரோ குறித்து ஜனாதிபதி சிறிசேன குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து அதன் இலங்கை செய்தியாளரிற்கு எதிராக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் சுதந்திர ஊடக இயக்கம் இது குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளது.

ரோ  இந்து நாளிதழின் கொழும்பு செய்தியாளர் ஊடாக நான்கு அமைச்சர்களுடன் தொடர்பை பேணுகின்றது  அவர்கள் மூலம் தகவல்களை பெறுகின்றது என அமைச்சர் மகிந்த அமரவீர குற்றம்சாட்டியுள்ளார்.

இந்து நாளிதழின் கொழும்பு செய்தியாளரிற்கு எதிராக முன்வைக்கப்படும் கருத்துக்கள் பதிலளிப்பதற்கான  உரிமை என்ற நிலையிலிருந்து அச்சுறுத்தலாக மாறியுள்ளன என சுதந்திர ஊடக இயக்கம்  தெரிவித்துள்ளது.

இது ஊடக சுதந்திரம் கருத்து வெளிப்பாட்டு உரிமை ஆகியவற்றை மீறும் செயல் எனவும் சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பை தளமாக கொண்ட வெளிநாட்டுச்செய்தியாளரிற்கு எதிரான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்  அச்சுறுத்தும் செயற்பாடு என தெரிவித்துள்ள சுதந்திர ஊடக இயக்கம் செய்திக்கான மூலம் எதுவென்பது குறித்த இரகசியத்தை பேணுவதற்கு பத்திரிகையாளருக்கு உள்ள உரிமையை அனைவரும் மதிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது