ஞாயிற்றுக்கிழமை நாட்களை அறநெறி கல்விக்காக ஒதுக்குவது தேசத்தினதும் பிள்ளைகளினதும் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானதாகுமென்று ஜனாதிபதி தெரிவித்தார். 

சட்டத்தின் மூலமோ சுற்று நிரூபங்களின் மூலமோ அல்லாது அதன் முக்கியத்துவத்தை விளங்கிக்கொள்ளும் அனைவரும் அந்த பொறுப்பை நிறைவேற்ற வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார். 

இன்று (24) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற அகில இலங்கை தொழில்சார் விரிவுரையாளர்கள் சங்கத்தின் எட்டாவது வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அனைத்து பிள்ளைகளுக்கும் அறநெறி கல்வியை பெற்றுக்கொடுப்பது ஒழுக்கப் பண்பாடான சமூகமொன்றை கட்டியெழுப்பும் பணியில் அவசியமான நடவடிக்கையாகுமென குறிப்பிட்ட ஜனாதிபதி, சமூகத்தின் கௌரவத்தை பெற்றுள்ள அனைத்து ஆசிரியர்களும் இந்த சமூகப் பிரச்சினையை தீர்ப்பதற்கு தமது பொறுப்புக்களை நிறைவேற்றுவர் என தாம் நம்புவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.  

நாட்டின் இளம் தலைமுறையின் முன்னேயுள்ள சமூக சவால்களை அரசாங்கம் தனித்து வெற்றிகொள்ள முடியாதென்றும் இதற்காக அனைவரும் கூட்டுப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

ஆசிரியர் தொழிலின் கௌரவத்தையும் பெறுமதியையும் வேறு எந்தவொரு தொழிலுடனும் ஒப்பிட முடியாது என்றும் ஆசிரியருக்குரிய கௌரவத்தையும் பெறுமானத்தையும் உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் கொள்கை ரீதியாக அர்ப்பணிப்புடன் உள்ளதென்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். 

அகில இலங்கை தொழில்சார் விரிவுரையாளர்களின் சங்கம் அரசாங்கத்துடன் இன்னும் நெருங்கிப் பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தொழில் வல்லுனர்கள் என்ற வகையில் அனைவரினதும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென்றும் தெரிவித்தார். 

அகில இலங்கை தொழில்சார் விரிவுரையாளர்கள் சங்கத்தின் வருடாந்த நினைவு மலர் ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டது. 

சங்கத்தின் உறுப்பினர்களுக்கான நினைவுச் சின்னங்களை ஜனாதிபதி  வழங்கி வைத்தார். 

ஜனாதிபதிக்கும் விசேட நினைவுச் சின்னமொன்று வழங்கிவைக்கப்பட்டது.

  அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, தயாசிறி ஜயசேகர, அகில இலங்கை தொழில்சார் விரிவுரையாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால் லியனகே ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.