மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தனாலும், அவர் பெற்றுக் கொண்ட சதத்தினாலும் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 321 ஓட்டங்களை குவித்தது.

இன்று பிற்பகல் 1:30 க்கு விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார்.

அதற்கிணங்க ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் தவான் ஆகியோர் களமிறங்கி துடுப்பெடுத்தாட, 3.1 ஓவரில் ஹேமர் ரோஜ்ஜுனுடைய பந்து வீச்சில் ரோஹித் சர்மா 4 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேற, அதிரடியாக ஆட முற்பட்ட தவானும் 8.4 ஆவது ஓவரில் அஸ்லி நர்ஸினுடைய பந்து வீச்சில் 1 ஆறு ஓட்டம் 4 நான்கு ஓட்டம் உள்ளடங்களாக 29 ஓட்டத்துடன் வெளியேறினார்.

இதனால் இந்திய அணி 8.4 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து 40 ஓட்டங்களை பெற்றது. தொடர்ந்தும் விராட் கோலி, மற்றும் ராயுடு களமிறங்கி ஜோடி சேர்ந்தாட இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கை விக்கெட் இழப்பின்றி அதிகரிக்க ஆரம்பித்தது.

அந்த வகையில் 19.3 ஓவரில் இந்திய அணி 2 விக்கெட்டுக்களை இழந்து 100 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. கோலி 39 ஓட்டத்துடனும், ராயுடு 28 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடிவர 25 ஆவது ஓவரில் 56 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி 5 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்களாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது 49 அரை சதத்தை பூர்த்தி செய்ய, மறுமுணையில் ராயுடு, 61 பந்துகளில் 5 நான்கு ஓட்டம் உள்ளடங்களாக அரைசதம் கடந்தார்.

தொடர்ந்தும் இவர்கள் இருவரும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்துகளை நான்கு திசைகளிலும் அடித்தாடி 28.3 ஆவது ஓவரில் இந்திய அணி 150 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. எனினும் 32.2 ஓவரில் ராயுடு அஸ்லி நர்ஸினுடைய பந்து வீச்சில் 73 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

இவரின் வெளியேற்றத்தை தொடர்ந்து களமிறங்கிய தோனியுடன் கைகோர்த்தாடி வந்த அணித் தலைவர் விராட் கோலி 36.3 ஆவது ஓவரில் ஒருநாள் சர்வதேச அரங்கில் 10 ஆயிரம் ஓட்டங்களை கடக்க இந்திய அணி 40 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை 221 ஓட்டங்களை பெற்றது.

எனினும் தோனி 40.2 ஆவது ஓவரில் 20 ஓட்டத்துடன் ஓபேட் மெக்கொயினுடைய பந்தில் போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேற அடுத்து களமிறங்கிய ரிஷாத் பந்தும் 17 ஓட்டத்துடன் சாமுவேல்ஸின் பந்தில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய ஜடேஜாவுடன் கைகோர்த்தாடிய விராட் கோலி 43.5 ஆவது பந்தில் ஒரு நான்கு ஓட்டத்தை விளாசி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது 37 சதத்தை பூர்த்தி செய்தார்.

அத்துடன் 46.2 ஆவது பந்தில் ஒரு ஆறு ஓட்டத்தை விளாசி 2018 ஆம் ஆண்டில் இதுவரை ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 1000 ஓட்டங்களை கடந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாக இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின்  நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 321 ஓட்டங்களை குவித்தது. ஆடுகளத்தில் தொடர்ந்தும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விராட் கோலி 13 நான்கு ஓட்டம் மற்றும் 4 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 157 ஓட்டத்துடனும், மொஹமட் ஷெமி எதுவித ஓட்டமிமுன்றி ஆட்டமிழக்காதிருந்தனர். 

இதன் மூலம் மேற்கிந்திய அணிக்கு வெற்றியிலக்காக 322 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

பந்து வீச்சில் மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் அஸ்லி நர்ஸ் மற்றும் ஓபேட் மெக்கொய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், ஹேமர் ரோஜ், சாமுவேல்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.