(நா.தினுஷா) 

ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைகள் குறித்து விமர்சிப்பதற்கான தார்மீக உரிமை எவருக்குமில்லை. கட்சியின் தலைமைத்துவம் டீ.எஸ்.சேனாநாயக்க மற்றும் டட்லி சேனாநாயக்க போன்றவர்களில் கையில் இருந்தப்போது காணப்பட்ட நிலை தற்போது இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்படுவது உண்மையே. காரணம் அன்று அவர்களை போன்று இன்று கட்சி ரணில் விக்கரமசிங்க, சஜித் பிரேமதாசவின் வழிநடத்தல்களில் உள்ளது என்றும் அன்றிருந்த ஆட்சிமுறைமைக்கும், தற்போதுள்ள ஆட்சி நிலைக்கும் பாரிய மாற்றம் உள்ளதாகவும் ஐக்கிய தேசிய கட்சி குறிப்பிட்டுள்ளது. 

மேலும் அன்று ஐக்கிய தேசிய கட்சியில் பேணப்பட்டு வந்த ஊழல் மோசடி அற்ற உண்ணத நிலை இதுவரை காலமும்  பின்பற்றி  வருகின்றது. அத்துடன் அன்று இல்லாதவாறு ஊழல் மோசடி செய்தவர்களை கண்டறிவதற்கான பொறுப்பும் எழுந்துள்ளதாக அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த திங்கட் கிழமை  இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போது, ' டீ.எஸ்.சேனாநாயக்க, டட்லி சேனாநாயக்க போன்றோரின் ஆட்சிகாலத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் காணப்பட்ட நிலை இன்று இல்லை என்றும், அன்றைய காலக்கட்டத்தில் ஊழல் மோசடியற்ற நிலைமைகள் காணப்பட்டது. ஆனால் அந்த நிலை அக்கட்சியில்  தற்போது  இல்லை என்பது புரிகிறது" என குறிப்பிட்டிருந்தார். 

இந்த விடயம் தொடர்பில் வினவியபோதே சட்டம் ஒழுங்கு அமைச்சர்  ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வள பிரதியமைச்சர்  அஜித் பி பெரேரா ஆகியோர் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.