இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி டக்வெத் லூயிஸ் முறையில் 219 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்று, ஆறுதல் வெற்றியீட்டியுள்ளது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி இலங்கை அணியுடன் 5 ஒருநாள் போட்டிகள், 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்துள்ள ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 3:1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இந் நிலையில் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு, ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக பிற்பகல் 2:30 மணிக்கு ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமல் முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார்.

அதன்பிரகாரம் முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 366 பெற்றது.

இலங்கை அணி சார்பில் அதிகபடியாக நிரோஷன் திக்வெல்ல 95 ஓட்டத்தையும், சந்திமல் 80 ஓட்டத்தையும், குசல் மெண்டீஸ் 56 ஓட்டத்தையும், சதீர சமரவிக்ரம 54 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.

367 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு இலங்கை அணிப் பந்து வீச்சாளர்கள் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர். 

அதன்பிரகாரம் முதல் ஓவரின் இறுதிப் பந்தில் ஜோசன் ரோய் 4 ஓட்டத்துடன் ராஜிதவின் பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேற, அலெக்ஸ் அலீஸும் 1.2 ஆவது ஓவரில் சாமரவின் பந்து வீச்சில் குசல் மெண்டீஸுடம் படிகொடுத்து எதுவித ஓட்டமுமின்றி டக்கவுட்  முறையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஜோஸ் பட்லரும் அதே ஓவரில் நான்காவது பந்து வீச்சில் சமரவிக்ரமவின் அற்புதமான பிடியெடுப்பு காரணமாக எதுவித ஓட்டமுமின்றி டக்கவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

இதனால் இங்கிலாந்து அணி 1.4 ஓவரில் 6 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து நிலை குலைந்தது. இதன் பின்னர் ஜோ ரூட்டும், பென்ஸ்டோக்ஸும் ஜோடி சேர்ந்தாடி ஓரளவு தாக்குப் பிடித்தனர். 

எனினும் 7.2 ஆவது ஓவரில் ரூட் சாமரவின் பந்தில் 10 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினார். இவரின் வெளியேற்றத்தை தொடர்ந்து களம்புகுந்த மெய்ன் அலியுடன் ஜோடி சேர்ந்தாடிய பென்ஸ்டோக்ஸ் அதிரடியான ஆட்டத்த‍ை வெளிப்படுத்தி 17.4 ஆவது ஓவரில் ஒரு நான்கு ஓட்டத்தை விளாசி அரை சதம் கடக்க அணியின் ஓட்ட எண்ணிக்கை 100 ஐ கடந்தது.

இருப்பினும் 18.2 ஆவது ஓவரில் ஓரளவு தாக்குப் பிடித்து வந்த மொய்ன் அலி 37 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணியின் விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து சரியத் தொடங்கின.

அதன்படி ஷெம் குரன் 2 ஓட்டத்துடனும், பென் ஸ்டோக்ஸ் 67 ஓட்டத்துடனும், அடீல் ரஷித் 4 ஓட்டத்துடனும், பிளன்கட் 5 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேற போட்டி மழை காரணமாக இடை நிறுத்தப்பட்டது.

இந் நிலையில் இங்கிலாந்து 26.1 ஓவரில் அணி 9 விக்கெட்டினை இழந்து 139 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்ததுடன், வெற்றிக்காக இன்னும் 235 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 

எனினும் மழை தொடர்ச்சியாக பெய்த காரணத்தினால் இலங்கை அணி டக்வெத் லூயிஸ் முறைப்படு 219 ஓட்த்தினால் அபாரமாக வெற்றியீட்டியது.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் அகில தனஞ்சய 4 விக்கெட்டுக்களையும், சமார 3 விக்கெட்டுக்களையும், கசூன் ராஜித மற்றும் தனஞ்சய டிசில்வா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.