ஆயுதப் போருக்கு முடிவு கட்டி விட்டோம். அரசியல் பிரச்சினைக்கு தீர்வு கண்டு விடுவோமென அரசு கூறிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் இன்று மாற்றுவடிவில் உருவாகியிருக்கும் பிரச்சினையாக, போதைப்பொருள் வர்த்தகம் அரங்கேறியுள்ளது.
நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு தீர்வுகாண அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்ற நிலையில் நாட்டின் அடிப்படைக் கட்டுமானங்களையே உடைத்து விடுவோம் என்று சவால்விடுமளவுக்கு நாட்டில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதை அண்மைய செய்திகள் எமக்கு எடுத்துக் காட்டுகின்றன.
உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு சுமார் 9 வருடங்கள் கடந்துள்ள போதிலும் இன்னமும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுகளோ மேலும் அவர்களுக்கான வாழ்வாதார திட்டங்களோ முற்றுமுழுதாக நிறைவேற்றப்படாத நிலையில் தமிழர் தாயகப் பிரதேசங்களில் இந்த போதைப்பொருள் பாவனை என்பது அதிகரித்துள்ளமையை எம்மால் அறிந்துகொள்ள முடிகின்றது மேலும் நாட்டின் இன்றைய சூழலில் வடகிழக்கு இளைஞர்களை சீர்குலைக்கவும் நாட்டில் தேசிய ரீதியாக பிளவுபடுத்தவும் என்ற குறிக்கோளை அடிப்படையாக கொண்டே இந்த போதைப்பொருள் பாவனை இலங்கையில் உள்நாட்டு சக்திகளும் வெளிநாட்டு சக்திகளும் இணைந்து செயற்பட எத்தனிக்கின்றன என்ற தகவல்களை அண்மைக்கால தகவல்கள் மூலமும் அறியக்கூடியதாகவுள்ளது.
யாழ். குடா நாடு யுத்தம் நடைபெற்ற காலத்திலிருந்து ஒழுக்க விழுமியங்களின் உயர்ந்த தன்மையும் யுத்தம் முடிவுற்றதன் பின் ஏற்பட்டுள்ள கெடுமானங்கள் பற்றியும் நாம் நிறைய அறிந்திருக்கின்றோம். உயர்ந்த வாழ்வியல்கள், ஒழுக்கப் பெறுமானங்கள், பண்பாட்டுக் கோலங்கள் நிறைந்த யாழ். குடாநாட்டில் இளைஞர் மற்றும் யுவதிகள் மத்தியில் போதைவஸ்து பாவனைகளை வளர்த்து விடுவதற்காகவும் ஒழுக்கமற்ற சமூகமாக மாற்றுவதற்காகவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது அண்மைக்காலங்களில் வெளியான செய்திகளில் இருந்து அறிந்து கொள்ள முடிகின்றது.
அதன் ஒட்டு மொத்த விளைவாகவே இன்று யாழ். குடா நாட்டில் பட்டப்பகலில் கொள்ளையும் ஈவிரக்கமற்ற கொலைகளும் நடைபெறும் வன்மம் மிக்க ஒரு சமுதாயமாக ஆகிக்கொண்டிருப்பதை நாம் காணமுடிகிறது. கிடுகு வேலிக்குள்ளும் பனையோலை கலாசாரத்துடனும் வாழ்ந்து காட்டிய மக்கள் மத்தியில் இன்று எல்லாமே சீரழிந்து போனதாக கவலை கொள்ளும் முன்னையவர்களையும் காணுகின்றோம்.
ஆறுமுக நாவலர் வளர்த்த கந்தபுராணக் கலாசாரமும் சைவ நெறிஒழுக்கங்களையும் கெடுக்கும் உள்நோக்கம் கொண்ட சக்திகள் மாணவர் மத்தியிலும் போதைப் பாவனைகளையும் கெடுமானங்களையும் உண்டாக்கும் செய்திகளும் வந்த வண்ணமேயுள்ளன. பனைமரத்தை அண்ணார்ந்து பார்த்தாலே பாவமென்று நினைக்கும் ஒரு சமுதாயம் கேரள கஞ்சாவை கடத்தும் அளவுக்கு தறி கெட்டு நிக்கின்றது என்பது கவலை தருகின்ற விடயம்தான்.
இந்த விடயங்கள் கிழக்குப் பிராந்தியத்தையும் விட்டு வைக்கவில்லை என்பதற்கு பல உதாரணங்களைக் கூறலாம். மதுபானக்கடைகள் அதிகம் உள்ள மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகின்றது என பல சந்தர்பங்களில் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இதேபோல் திருகோணமலை மாவட்டத்தை எடுத்துக் கொள்வோமாயின் உடல் பிடிப்பு நிலையங்கள் என மருத்துவக் காரணங்கள் சாட்டாக ஏராளமான மசாஜ் நிலையங்கள் திருகோணமலை நகரை அண்டிய புறநகர் பகுதியில் வெளிமாவட்டத்தவர் வந்து நடத்தும் இழிநிலையும் உருவாகியுள்ளது.
வித்தியா கொலை, வவுனியா உக்குளாங்குளம் சிறுமி ஹரிஸ்ணவி படுகொலையென எத்தனையோ சம்பவங்கள் நடந்தேறியதன் பின்னணியில் இருக்கும் மூல காரணங்களாக போதைவஸ்து பாவனை, மது பாவனை போன்ற துர்பழக்கங்கள்களே அமைந்தள்ளது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் சிறுவர்கள் மீதான துன்புறுத்தல் அதிகரித்து வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. வருடத்தின் 6 மாத காலத்திற்குள், துன்புறுத்தல் தொடர்பில் 4,831 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சபையின் பணிப்பாளர் நாயகம் அனோமா சிறிவர்தன குறிப்பிட்டுள்ளார்.
சிறுவர்களைத் துன்புறுத்துவது தொடர்பில் 1,201 முறைப்பாடுகளும் வன்கொடுமை தொடர்பில் 581 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், துன்புறுத்தல்கள் தொடர்பில் பதிவுசெய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கான ஒட்டுமொத்த காரணியாக அமைந்திருப்பது மது மற்றும் போதைப்பொருள் பாவனையே என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பொது இடங்களில் புகைப்பிடித்தல் குற்றம், மது அருந்துதல் குற்றம், விற்றல் குற்றம், வாங்குதல் குற்றமென்று கூறுகின்ற சட்டத்தை ஆக்குகின்றவர்கள், பெயரிலையே அனுமதிப்பத்திரங்களும் மதுபானசாலைகளும் குடிவகை கொண்ட ஹோட்டல்களும் இருப்பது இந்த நாட்டில் ஆச்சரியமான ஒரு விடயமல்ல.
இதைவிட பாதாள உலகக் குழுக்களின் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் என அறியமுடியாத நிலையில் இலங்கையின் பாதுகாப்பு எவ்வாறு உறுதிசெய்யப்படும் என்கின்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. கொழும்பை அண்டிய பகுதிகளில் பாதாள உலக கோஷ்டியின் அட்டகாசம் அடாவடித்தனங்கள் அதிகமாக இருக்கின்றமை அண்மையில் கொழும்பு புறநகர்பகுதிகளில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்ச்சூட்டு சம்பவங்கள் மூலம் புலப்படுகின்றது.
இந்த நிலையில் வடபுலத்தில் ஏதேதோ பெயர்களில் நடைபெறுகின்ற கொள்ளைகள், கொலைகள், மற்றும் வாள்வெட்டு சம்பவங்கள் கொடுமைகள் என்பன எண்ணிலடங்காதவைகளாகவே காணப்படுகின்றன. இச்சம்வங்களின் மூலகர்த்தாக்கள் யார் இவ்விதமான நடவடிக்கைகள் எங்கிருந்து தொடங்கி வைக்கப்பட்டுள்ளன என்பவை அறியப்பட வேண்டியவை மாத்திரமல்ல அடக்கப்பட வேண்டியவையுங் கூட.
யாழ். குடா நாட்டைப் பொறுத்தவரை யுத்தத்துக்கு முன்னைய காலப்பகுதியை விட பின்னையக் காலப்பகுதியில் பொலிஸ் நிலையங்கள் கடற்படை தளங்கள் இராணுவ முகாம்கள் ஏராளமாகவேயுள்ளன. பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் நகர்வுகளும் பரிசோதனைகளும் அதிகமாகவேயுள்ளன. இருந்த போதிலும் இவ்விதமான சம்பவங்கள் எப்படி நடக்கின்றன. இதை யார் நடத்திவைக்கிறார்கள்? என்பது கண்டுபிடிக்கபடாத மர்மமாகவே இருந்து கொண்டிருக்கின்றது.
இவ்வாறான கெடுபிடிகள் நாடு சாபக்கேட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது என்பதை சுட்டிக்காட்டுகிறதே தவிர நல்லதொரு சகுனமாகத் தெரியவில்லை.
வடபுலத்தில் இந்தியக் கடத்தல்கள் அதிகரித்து வருகின்றது. கள்ளத்தோணிகளின் வருகை பெருகுகிறது என்பதைக் காரணமாக காட்டி 1960 ஆம் ஆண்டுகளைத் தொடர்ந்து அன்றைய ஆட்சியாளரான திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா அதனை தொடர்ந்து வந்த டட்லி சேனநாயக்கா அரசாங்கம் பெருமளவிலான முகாம்களையும் பொலிஸ் நிலையங்களையும் வடபுலத்தில் நிறுவினார்கள். யுத்தம் முடிவடைந்ததன் பின்னரும் கூட பொலிஸ் மற்றும் ராணுவத்தின் பெரும் பகுதி யாழ்மாவட்டத்தை மைய்யப்படுத்தியதாக அமைந்திருந்தும் கூட இன்னமும் யாழ்பாணம் போதைவஸ்து கடத்தல் மற்றும் பாவனையில் முன்னனியில் இருப்பது ஆச்சரியமான விடையமே !
இங்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளினால் ஏன் இந்த போதைப்பொருள் பாவனையை இத்தனை வருடங்களாக முடிவுக்கு கொண்டவர முடியாமல் உள்ளது. தற்போது கேரளாவிலிருந்து கொண்டு வரப்பட்டுகின்ற கேரளகஞ்சாவானது நாட்டின் பெரும்பான்மையான இடங்களில் பயன்படுத்தப்படுகின்றமை பொலிஸாரின் கைது நடவடிக்கைகள் மூலம் புலப்படுகின்றது .
மேலும் இந்த கஞ்சா போதைப்பொருள் இந்தியாவிலிருந்து பருத்தித்துறை மாதகல் போன்ற கடற்கரைப் பிரதேசங்கள் ஊடாக கடத்தி வந்திருக்கலாமென ஊகிக்க முடிகிறது என தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாகச் சொல்லப் போனால் போதைப்பொருள் கடத்தலின் கேந்திர மையமாக யாழ். குடா நாடு மாறிவருகின்றதா? என்ற ஐயத்தை மேற்படி கடத்தல் சம்பவங்கள் நினைவூட்டி நிற்கின்றன.
இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல் தேசிய ரீதியான ஒழுக்கக்கேடுகள் மூலம் நாட்டின் சீர் குலைக்கும் ஒரு முயற்சியாக போதைப்பொருள் வர்த்தகத்தின் ஒரு தளமாக எமது நாட்டை பாவிக்க அந்நிய நாட்டு சக்திகளும் போதைப் பொருள் கடத்தல் கும்பல்களும் முயற்சி செய்கின்றனவா? என்ற சந்தேகங்கள் அண்மைய சம்பவங்கள் மூலம் எழுந்து நிற்கின்றன.
இலங்கையொரு ரம்மியமான அழகை தன்னகத்தே கொண்ட ஒரு நாடு 30 வருடகால யுத்தம் காரணமாக சீரழிந்து போய்விட்ட சமூகப் பொருளாதாரங்களை மீண்டும் கட்டியெழுப்பும் தீவிர முயற்சிகள் தற்போதும் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழ்நிலையில் உள்நாட்டளவிலும் வெளிநாட்டு தொடர்புகள் மூலமும் பின்னப்பட்டிருக்கும் இந்த போதைப் பொருள் கடத்தல் வலையமைப்பென்பது வெறுமனையே உள்நாட்டு நாணயக் கொள்ளைக்காகவோ அல்லது அந்நிய நாணய சம்பாத்தியத்துக்காகவோ செயல்படுகிறது என்பதற்கு அப்பால் நாட்டை மீண்டுமொரு அழிவுப்பாதையில் கொண்டுசெல்லும் உள்நோக்க அடிப்படையில் செயற்படுகின்றன என்பதை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
எது எவ்வாறு அமைந்தாலும் எமது நாட்டை போதைப்பொருள் அற்ற நாடாக உருவாக்க நாம் ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும் என்பது மட்டுமன்றி எமது சமுதாயத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நாம் செயல்பட வேண்டியது அவசியமாகின்றது.
(எம்சி ரா)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM