கொழும்பு துறைமுகத்தில் இருந்து கொலன்னாவை பிரதேசத்திற்கு செல்லும் எரிபொருள் குழாயை அண்மித்த பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு புதிய வீடுகள் வழங்கப்படும் என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

அதன் முதற்கட்டமாக அப் பிரதேசத்தை சேர்ந்த முதல் 20 குடும்பங்களுக்கு புதிய வீடுகளை கையளிக்கும் பணிகள் இன்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோத அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்,

அங்கு அமைச்சர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

இப் பிரதேச வாசிகளை குறித்த பகுதியிலிருந்து வெளியேற்ற நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனினும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த அரசாங்கம் செயல்படுவதனால் அப் பிரதேசத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் புதிய வீடுகளை வழங்க நாம் முன்வந்துள்ளோம். அதன் முதற்கட்டமாகவே முதல் 20 குடும்பங்களுக்கு நாம் இன்று புதிய வீடுகளை வழங்கியுள்ளோம். ஏனையோர்களுக்கும் கட்டாயமாக வீடுகள் வழங்கப்படும். 

மேலும் இந் நிகழ்வில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக,

இந்த எரிபொருள் குழாய் 70 ஆண்டுகள் பழமையானமையால் இது எப்போது உடைந்து போகும் என்று எங்களால்  கூறமுடியாது. நாங்கள் கடந்த 20 ஆண்டுகளில் எந்த வித புது குழாயையும் இணைக்கவில்லை. ஆனால் தற்போது புதிய குழாயை அமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த அபிவிருத்தி திட்டமானது  பிரதேசவாசிகளின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுத்தே முன்னெடுக்கப்படுகின்றது என்றார்.