இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் திக்வெல்ல, சதீரவின் சிறந்த இணைப்பாட்டத்தினாலும், சந்திமாலின் அதிரடி துடுப்பாட்டத்தினாலும் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டினை இழந்து 366 ஓட்டங்களை பெற்றது.

கொழும்பு, ஆர். பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமல் முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார்.

அதன்படி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக நிரோஷன் திக்வெல்ல மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோர் களமிறங்கி மைதானத்தில் அதிரடி காட்டி வர, நான்காவது ஓவருக்காக ஷெம் குரன் பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள சதீர அந்த ஓவருக்கு 4 நான்கு ஓட்டங்களை விளாசித் தள்ளினார்.

தொடர்ந்தும் இவர்கள் இருவரும் அதிரடியாக துடுப்பெடுத்தாட இலங்கை அணி 13.5 ஆவது ஓவரில் விக்கெட் இழப்பின்றி 100 ஓட்டங்களை பெற்றது. 

இந் நிலையில் 14.1 ஆவது ஓவரில் 49 பந்துகளை எதிர்கொண்ட திக்வெல்ல 6 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்களாக சர்வதேச ஒருநாள் அரங்கில் தனது 8 ஆவது அரை சதத்தை பூர்த்தி செய்ய, மறுமுணையில் சதீர 40 பந்துகளை எதிர்கொண்டு 8 நான்கு ஓட்டங்கள் அடங்களாக முதல் அரை சதத்தை பூரத்தி செய்தார்.

எனினும் 19.1 ஆவது ஓவரில் மெய்ன் அலியினுடைய பந்து வீச்சில் சதீர 54 ஓட்டத்துடன் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். இதனால் இலங்கை அணியின் முதல் விக்கெட் 137 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது.

அதன்பின் களமிறங்கிய அணித் தலைவர் தினேஷ் சந்திமலுடன் ஜோடி சேர்ந்தாடிய திக்வெல்லவும் 25.4 ஆவது ஓவரில் மெய்ன் அலியினுடைய பந்து வீச்சில் 95 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பினை தவற விட்டார்.

அவரின் வெளியேற்றத்தை தொடர்ந்து குசல் மெண்டீஸும், தினேஷ் சந்திமலும் ஜோடி சேர்ந்தாடி வர இலங்கை அணி 30 ஓவர்களுக்க 2 விக்கெட்டினை இழந்து 200 ஓட்டங்களை பெற்றது. தினேஷ் சந்திமல் 36.4 ஆவது ஓவரில் 49 பந்துகளை எதிர்கொண்டு 3 நான்கு ஓட்டங்கள், 1 ஆறு ஒட்டங்கள் அடங்களாக அரைசதம் விளாசினர்.

அவரைத் தொடர்ந்து அதிரடி காட்டி வந்த குசல் மெண்டீஸும் அரை சதம் விளாசி 33 பந்துகளில் 6 ஆறு ஒட்டங்கள், 1 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 56 ஓட்டத்துடன் பிளன்கட்டினுடைய பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இவரின் ஆட்டமிழப்பையடுத்து களம்புகுந்த தசூன் சானக்கவும் 18 ஓட்டத்துடன் ஆட்மிழக்க திஸர பெரேரா களம்புகுந்து சந்தமலுடன் இணைந்து துடுப்பெடுத்தாடி வர இலங்கை அணி 41.2 ஆவது ஓவரில் 4 விக்கெட்டுக்களை இழந்து 300 ஓட்டங்களை தொட்டது.  

எனினும் 45.3 ஆவது பந்து வீச்சில் அணித் தலைவர் தினேஷ் சந்திமல் 80 ஓட்டத்துடனம் 45.4 ஆவது பந்தில் திஸர பெரோரா 11 ஓட்டத்துடனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியாக இலங்கை அணி 48.5 ஆவது பந்தில் 6 விக்கெட்டினை இழந்து 350 ஓட்டங்களையும், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 366 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டது.

இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு வெற்றியிலக்காக 367 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது. ஆடுகளத்தில் அகில தனஞ்சய 18 ஓட்டத்துடனும் தனஞ்சய டிசில்வா 19 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் டொம் குரன், மொய்ன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், அடில் ரஷித் மற்றும் பிளன்கட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தனர்.

இதுவே கொழும்பு ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை என்பதும் குறிப்பிடத்தக்கது.