இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர் மகேந்தரசிங் டோனி மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான கெளதம் கம்பீரையும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் களமிறக்குவதற்கு பாரதிய்ய ஜனதா கட்சி தீர்மானித்துள்ளது.

கடந்த 2014 ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய்ய ஜனதா கட்சி அமோக வெற்றயீட்டி, ஆட்சியை கைப்பற்றியது. இதேபோல் அடுத்த ஆண்டும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுத்து வருகிறது.

அதன் ஒரு கட்டமாகவே தற்போது டோனியையும், கம்பீரையும் பாரதிய ஜனதா சார்பில் அவர்களுடைய சொந்த மாநிலத்திலேயே வேட்பாளர்களாக களம் இறக்க தீர்மானித்துள்ளது.

எனினும் தேர்தலில் போட்டியிட டோனி தயங்கி வருவதால் பா.ஜனதா மூத்த தலைவர் ஒருவர் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.

ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக டோனி இருப்பதால் தமிழ் நாட்டில் அவருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். எனவே டோனியை பிரசாரத்தில் ஈடுபடுத்துவதன் மூலம் தமிழ் நாடு மட்டுமின்றி தென் இந்தியாவில் பா.ஜனதாவுக்கு கணிசமான ஓட்டுகள் கிடைக்கும் என்று அந்த கட்சி மேலிடம் கருதுகிறது.

இந் நிலையில் சர்வதேச சந்தையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, பெற்றோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பா.ஜனதா அரசு மீது அதிருப்தி நிலவுகிறது. இந்த அதிருப்தியை சமாளிக்க பா.ஜனதா புதிய வியூகத்தை அமைத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.