இயக்குநர் சுசிந்திரனின் இயக்கத்தில், ‘இயக்குநர் இமயம் ’ பாரதிராஜா மற்றும் ‘வில்லேஜ் ஸ்டார் ’ நடிகர் சசிகுமார் முக்கிய வேடங்களில் நடிக்கும் ‘கென்னடி கிளப் ’ எனும் திரைப்படத்தை இயக்கவிருக்கிறார். இதற்கான தொடக்கவிழா நேற்று நடைபெற்றது.

இயக்குநர் சுசீந்திரன் விளையாட்டை மையமாக வைத்து படம் எடுத்து வெற்றிப் பெற வைப்பதில் தேர்ச்சி பெற்றவர். கபாடியை மையப்படுத்தி, ‘வெண்ணிலா கபாடிக்குழு ’ வையும்,  கிரிக்கெட்டை பிரதானப்படுத்தி ‘ஜீவா ’வையும் இயக்கி வெற்றிப் பெற வைத்தார். தற்போது கால்பந்தை மையமாக வைத்து ‘சாம்பியன் ’என்ற படத்தை இயக்கி வருகிறார். இவர் மீண்டும் கபாடி விளையாட்டின் பக்கம் தன் கவனத்தை திருப்பியிருக்கிறார். இந்த முறை பெண்கள் கபாடியை முன்னிறுத்தவிருக்கிறார். 

‘கென்னடி கிளப் ’ என்ற பெயரில் உருவாகும் இந்த படத்தில் கபாடி வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளராக சசிகுமார்  நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் பொலிவுட்டைச் சேர்ந்த ஒருவர் வில்லனாக நடிக்கவிருக்கிறார். இதைத் தவிர்த்து பாரதிராஜா முக்கிய வேடத்தில்  நடிக்கிறார்.

சூரி, முனிஸ்காந்த், மீனாட்சி, காயத்ரி, நீது, சௌமியா,ஸ்மிரிதி, சௌந்தர்யா என ஏராளமான நடிகைகள் நடிக்கிறார்கள். இந்த படத்தில் உண்மையான கபாடி வீராங்கனைகளும் நடிக்கவிருக்கிறார்கள்.

இதன் தொடக்கவிழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதன் போது படக்குழுவினர் அனைவரும் பங்குபற்றினர்.

இதனிடையே சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜீனியஸ் என்ற படம் எதிர்வரும்  26 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.