குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் மன்னார் நீதிவான் நீதிமன்றில் வழக்கொன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது சந்தேக நபரான மகனுக்கு நீதிவான் பிணையில் செல்ல உத்தரவிட்ட நிலையில் சந்தேக நபரை சிறைக்காவலர் கூட்டுக்குள் அழைத்து சென்றதை கண்ணுற்ற சந்தேக நபரின்  தாய் நீதிமன்றுக்குள் மயங்கி விழுந்த சம்பவம் புதன்கிழமை இடம்பெற்றது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

மன்னார் நகரை அண்டிய ஒரு கிராமத்தில் வசிக்கும் இரு பிள்ளைகளைக் கொண்ட   அரச ஊழியர் குடும்ப பெண் ஒருவர், தனது கணவர் குடும்ப வன்முறையில் ஈடுபடுவதாக  மன்னார்  பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதைத் தொடர்ந்து பொலிசார் மன்னார் நீதவான் நீதின்றில் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

இவ் வழக்கானது நேற்று புதன்கிழமை மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஐh முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது சந்தேக நபருக்கு சார்பாக சட்டத்தரணி செபநேசன் லோகுவும் முறைப்பாட்டாளருக்கு சார்பாக சட்டத்தரணி எம்.ஏ.எம்.முபாறக் ஆகியோரும் ஆஐராகி தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.

இதன்போது சந்தேக நபரான கணவர், மனைவி பிள்ளைகள் வாழும் வீட்டுக்குச் செல்ல இடைக்கால தடை உத்தரவு வழங்கப்பட்டதுடன் சந்தேக நபரை ஐம்பதாயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்ல நீதவான் கட்டளைப் பிறப்பித்தார்.

இதைத் தொடர்ந்து நீதிமன்றில் கடமையில் இருந்த சிறை காவலர் சந்தேக நபரை நீதிமன்றுக்குள் இருக்கும் கைதிகளின் கூண்டுக்குள் அழைத்துச் சென்றபோது நீதிமன்றில் பார்வையாளராக முன்வரிசையில் இருந்த சந்தேக நபரின் தாய் மயக்கமுற்று தரையில் விழுந்ததும் நீதிமன்றுக்குள் ஓரிரு நிமிடங்கள் அமைதி இழந்து காணப்பட்டது. 

 நீதிபதி உடனடியாக, சந்தேக நபரான மகனிடம் தாயை கவனிக்கும்படி உத்தர வழங்கியதும் மகன் தாயை வெளியில் அழைத்துச் சென்றார்.