இலங்கையின் புதிய பயங்கரவாத தடைச்சட்ட மூலம் குறித்து சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் கரிசனை வெளியிட்டுள்ளது.

புதிய பயங்கரவாத தடைச்சட்டம் குறித்த இலங்கையின் நகல்வடிவம் தற்போதைய பயங்கரவாத தடைச்சட்டத்தை விட முன்னேற்றகரமானதாக காணப்படுகின்ற போதிலும் மனித உரிமை மீறல்களிற்கு எதிரான மேலதிக ஏற்பாடுகள் அவசியம் என  மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்தள்ளது.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நகல் வடிவத்தில் காணப்படும் மேலதிக ஏற்பாடுகளை பயன்படுத்தி அமைதியான ஆர்ப்பாட்டங்களை தடை செய்ய முடியும்,அரசசார்பற்ற அமைப்புகளை தடைசெய்ய முடியும் எனவும் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதிய அளவிற்கு கட்டுப்படுத்தப்படவில்லை எனவும் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணம் முழுமையான சர்வதேச தராதரத்தை உடையதாக மாறுவதை இலங்கையின் நாடாளுமன்றம் உறுதி செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள  சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் சீர்திருத்தங்களை கைவிடுமாறு கொடுக்கப்படும் அழுத்தங்களிற்கு நாடாளுமன்றம் அடிபணியக்கூடாது எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை அரசாங்கம் சித்திரவதைகளை உள்ளடக்கிய பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு தீர்வை காண்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது எனினும் உத்தேச சட்டம் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான வலுவான ஏற்பாடுகளை கொண்டிருப்பது அவசியம் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் பயங்கரவாதம் குறித்த ஆராய்ச்சியாளர் லெட்டா டெய்லர் தெரிவித்துள்ளார்.

புதிய சட்ட மூலத்தில் துஸ்பிரயோகத்திற்கு வழிவகுக்க கூடிய பிரிவுகளை சேர்ப்பதை இலங்கை நாடாளுமன்றம் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பல வருடங்களிற்கு பின்னர் இலங்கை தனது அவப்பெயரை சந்தித்துள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிடும் நிலையிலுள்ளது எனகுறிப்பிட்டுள்ள டெய்லர் புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை வலுப்படுத்துவதன் மூலம் கடந்த கால துஸ்பிரயோகங்களில் இருந்து விடுபடுவதற்கான தனது விருப்பத்தை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.