சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மானைக் கடுமையாக விமர்சித்துவந்த பிரபலமான பத்திரிகையாளர் ஜமால் கஷொக்கி இம்மாத ஆரம்பத்தில் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவூதி துணைத்தூதரகத்திற்குள் சென்ற பின்னர் காணாமல்போனார்.
இதனையடுத்து அவரின் நிலை குறித்து பல்வேறு சாக்குப் போக்குகளைக் கூறிவந்த சவூதி அரசாங்கம் இறுதியில் எதையும்செய்ய முடியாமல் அவர் கொல்லப்பட்டுவிட்டதை இரு நாட்களுக்கு முன்னர் ஒத்துக்கொண்டுவிட்டது.
அவர் துணைத்தூதரகத்தில் இருந்து பத்திரமாக வெளியேறியதாகக் கூட ஒரு கட்டத்தில் சவூதி அதிகாரிகள் கூறினார்கள்.
துணைத்தூதரகத்திற்குள் கொலை நிகழ்ந்ததை உத்தியோகபூர்வமாக சவூதி ஏற்றுக்கொண்டிருப்பதால், அந்நாட்டு மன்னர் குடும்பம் பெரும் நெருக்கடிக்குள்ளாகக் கூடிய சூழ்நிலை தோன்றியுள்ளது.
இஸ்லாமிய உலகில் முக்கியமான முடியாட்சி நாடான சவூதி அரேபியாவுக்கும் மேற்குலக வல்லரசுகளுக்கும் இடையிலான உறவுகள் பாதிக்கப்படக்கூடிய ஆபத்து இருக்கிறது. கஷொக்கி கொலையினால் அமெரிக்கா ஆத்திரமடைந்திருக்கிறது. ஆனால், வயதில் மிகவும் இளயவரான முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மானின் வெற்றியை அடிப்படையாகவைத்தே மேற்காசியா தொடர்பான தனது தந்திரோபாயத்தை வகுத்திருக்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த நெருக்கடியை எவ்வாறு கையாளப்போகிறார் என்று முழு உலகமும் பார்த்துக்கொண்டிருக்கிறது. முடிக்குரிய இளவரசரின் அனுமதியின்றி கொலை நடந்திருக்கமுடியாது என்றே நம்பப்படுகிறது. அவரைப் பாதுகாப்பதற்கு ட்ரம்ப் நிருவாகம் இயன்றவலை முயற்சிக்கும் என்றே பரவலாக சந்தேகிக்கப்படுகிறது.
சவூதி அரசாங்கத்துடன் அமெரிக்கா 11,500 கோடி டொலர்கள் ஆயுத விற்பனை ஒப்பந்தமொன்றைச் செய்திருக்கிறது. அதை எப்படியேனும் காப்பாற்றவேண்டும் என்பதே ட்ரம்பின் நோக்கமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
சவூதி அரேபியா மீது தடைகளை விதித்து தண்டிக்குமாறு அமெரிக்காவிற்குள் நெருக்குதல்கள் அதிகரிக்கும் நிலையில் ட்ரம்பினால் என்ன செய்யக்கூடியதாகஇருக்கும் என்பது முக்கியமான ஒரு கேள்வி. தடைகள் விதிக்கப்படும் பட்சத்தில் சவூதி அரேபியா சர்வதேச எண்ணெய் விநியோகத்தை நிறுத்தி பதிலடி கொடுக்க முயற்சிக்குமேயானால் அதனால் உலகின் பல நாடுகளின் பொருளாதாரங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படக்கூடிய ஆபத்து இருக்கிறது.
கட்டவிழும் நிகழ்வுப்போக்குகள் ஈரானைத் தனிமைப்படுத்தி தண்டிப்பதில் தற்போது அமெரிக்கா காட்டுகின்ற தீவிரத்தைத் தணிக்கக்கூடியதாக மேற்காசியாவில் பிராந்திய புவிசார் அரசியலில் புதிய அணிசேருகைகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக சர்வதேச அரசியல் அவதானிகள் பரவலாக நம்புகிறார்கள்.
பகைமைகொண்ட சவூதி அரேபியாவுடனும் ஈரானுடனும் நல்லுறவுகளைப் பேணுவதில் நாட்டம்கொண்ட வளர்முக நாடுகள் மேற்குலகின் வியூகங்களின் விளைவாக உருவாக்கப்படுகின்ற அதிகார இழுபறிக்குள் அகப்படாமல் இருப்பதிலேயே அக்கறை காட்டவேண்டும்.
( வீரகேசரி இணையத்தள வெளியுலக அரசியல் ஆய்வுத்தளம்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM