(எம்.மனோசித்ரா)

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வினை வலியுறுத்தி  கொழும்பு காலி முகத்திடலில் சமூக வலைத்தளத்தில் ஒன்றிணைந்த இளைஞர்கள் அமைப்பொன்றினால் ஆர்ப்பாட்டம் நாளை மறுதினம் முன்னெடுக்கப்படவுள்ளது. அரசியல் மற்றும் அமைப்புக்கள் சார்பற்ற அனைத்து தரப்பில் உள்ள இளைஞர்களும் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர். 

இவ்விடயத்தை மேலும் பலப்படுத்தி தொழிலாளர் உறவுகளின் உழைப்பை சுரண்டவிடாது, உழைப்பிற்கேற்ற ஊதியத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காக இப்போராட்டத்தினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

வாழ்வாதாரத்திற்கு ஏற்ப அடிப்படை சம்பளத்தை அதிகரித்தல், தீபாவளி முற்பணத்தை உரிய நேரத்தில் வழங்குதல், கூட்டு ஒப்பந்தத்தை உரிய வகையில் நடைமுறைப்படுத்தல், கூட்டு ஒப்பந்தத்தை மீறி உரிமைகளை பரிக்காதிருத்தல் மற்றும் தோட்டத் தொழிலாளர்களை கௌரவமாக நடத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்படவுள்ளன. 

கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் இடம்பெற்ற மூன்று சுற்று பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் நிறைவடைந்துள்ள நிலையில் மலையகத்தின் பெரும்பகுதிகளில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் அவற்றுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் நாளைய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதோடு, நேற்று முன்தினம் வடக்கு மற்றும் கிழக்கிலும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.