பிரயாணிகளிடம் போலி பிரயாண ரசீதுகளை வழங்கி, பெருமளவு பணத்தைப் பெற்று தப்பிச் சென்ற சம்பவமொன்று நேற்று இரவு பதுளை தனியார் பஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

 

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் தனியார் ஆடம்பர பஸ்ஸிலேயே  போலி பஸ் நடத்துனர்கள் இருவர் தமது கைவரிசையை துணிகரமாக காட்டியுள்ளனர்.

பதுளை தனியார் பஸ் நிலையத்தில் கொழும்பு செல்லும் ஆடம்பர பஸ் நிறுத்தப்பட்டிருநு்த நிலையில், சாரதியும் பஸ் நடத்துனரும் இரவு உணவு அருந்தச் சென்றுவிட்டனர். 

இந்நிலையில், குறித்த பஸ்ஸில் கொழும்பு செல்லும் பிரயாணிகள் நிரம்பினர். தருணத்தை பார்த்திருந்த போலி நடத்துனர்கள் இருவர் குறிப்பிட்ட பஸ்ஸில் ஏறி, தம்மிடமிருந்த போலி பிரயாண ரசீதுகளை பிரயாணிகளுக்கு வழங்கி பிரயாணக் கட்டணங்களை வசூலித்தனர். 

பிரயாணக் கட்டணத்தைவிட கூடுதல் பணம் பெறப்பட்டபோது, பிறகு மீதிப் பணத்தை தருவதாகவும் கூறி, பிரயாணிகள் அனைவரிடமும் பெருமளவிலான பணத்தைப் பெற்று, போலி நடத்துனர்கள் தப்பிச் சென்றுள்ளார். 

பஸ் புறப்பட அரை மணித்தியாலத்திற்கு முன், குறிப்பிட்ட பஸ்ஸின் நடத்துனரும் சாரதியும் பஸ்ஸிற்கு வந்தனர். அத்துடன் பஸ் நடத்துனர், பிரயாணிகளிடம் பிரயாண ரசீதுகளை வழங்கி பணத்தை வசூலிக்க ஆரம்பித்தார். 

அப்போது, பிரயாணிகள் தாம் ஏற்கனவே, பிரயாண ரசீதுகளைப் பெற்றுக் கொண்டு, பணமும் கொடுத்துவிட்டதாகவும், மீதிப்பணம் தமக்கு இன்னும் கிடைக்கவில்லையென்றும் தெரிவித்தனர்.

 அத்துடன் தமக்கு வழங்கப்பட்ட பிரயாண ரசீதுகளையும் காட்டினர். அவைகள் போலி ரசீதுகள் என்றும் தெளிவாகின. 

சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியடைந்த பஸ் நடத்துனர் பதுளை பொலிசாருக்கு, புகார் செய்தார். பொலிசார் விரைந்து, பிரயாணிகளிடம் சாட்சியங்களைப் பெற்றுக்கொண்டு, போலி நடத்துனர்களைத் தேடி வலை விரித்துள்ளனர். 

இதுவரை போலி நடத்துனர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில், பொலிசார் தேடுதல்களை மேற்கொண்டுள்ளனர்.