புதிய அரசியல் யாப்பு வரும் என்ற கற்பனையில் காலத்தை வீணடிக்காமல் இப்போது இருக்கின்ற மாகாண சபை ஆட்சி முறையை சுயாதீனமும் ஆற்றலும் கொண்டதாக ஆக்குவதே தமிழ் மக்களின் உடனடித் தேவையாக காணப்படுகின்றது என்று வடகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜ பெருமாள் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

புதிய அரசியல் யாப்புக்கான பிரேரணை அடுத்த மாத நடுப்பகுதியில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படலாம் என சில அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறான அரசியல் யாப்பு திட்டத்தில் அதிகாரப் பகிர்வு தொடர்பான பிரேரணைகள் எவ்வாறு அமையப் போகின்றன என்பது பற்றி இன்று வரை, அரசியல் அவதானிகள் கூட சரியாக அறிய முடியாத அளவுக்கு மர்மங்களே நிலவுகின்றன. 

2013 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான பிரகடனம் உட்பட 2015 இறுதிவரை 'தமிழர்களின் தாயகமான இணைந்த வடக்கு கிழக்கில் சுயநிர்ணய உரிமைகள் கொண்டதான சமஷ்டித் தீர்வு' மட்டுமே தமிழர்களுக்கான அரசியற் தீர்வு எனக் கூறி வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், 2015ம் ஆண்டு இப்போதுள்ள ஆட்சியினருடன் ஒட்டி உறவாடத் தொடங்கியதைத் தொடர்ந்து 'ஓற்றையாட்சிக்குள் சமஷ்டி' எனும் புதுவகையான விளக்கம் கொண்ட ஒரு தீர்வுத் திட்டத்தை சாதிக்கப் போவதாக கூறி வருகின்றனர். 

புதிய அரசியல் யாப்பானது அவ்வாறாக சமஷ்டிக்குரிய பண்புகளைக் கொண்டதாக இருக்குமா? இல்லையா? ஏன்பதற்கான விவாதங்களும் காத்திருக்கின்றன. 

ஆளும் கூட்டாட்சி பிளவுபட்ட நிலையிலுள்ளது, அத்துடன் சிங்கள இனவாத சக்திகள் புதிய அரசியல் யாப்புக்கு எதிராக அணி திரண்டு நிற்கின்றன. இவ்வாறான இன்றைய காலகட்டத்தில் புதிய அரசியல் யாப்பு பிரேரணை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டாலும் அது அடுத்த கட்டத்துக்கு முன்னேற முடியாத நிலையே உள்ளது. 

2000 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகவிருந்த சந்திரிகா முன்வைத்த அரசியல் யாப்பு திட்டத்துக்கு நேர்ந்த கதியே இந்த அரசாங்கத்தினது புதிய அரசியல் யாப்பு திட்டத்துக்கும் ஏற்படவுள்ளது என்றே தெரிகின்றது. இந்நிலையில் ஏமாறப் போவது தமிழ் மக்களே!.

ஓவ்வொரு தேர்தலிலும் பெரும்பான்மையான தமிழர்களை ஏமாளிகளாக்கி அடுத்தடுத்து பாராளுமன்றப் பிரதிநிதிகளாகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது சுய நல அரசியல் நோக்கங்களுக்காக தங்களது கற்பனைக் கோட்டைகளை தமிழர்கள் மத்தியில் வியாபாரம் செய்யும் அரசியலை ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு, அரசாங்கத்துடன் தாங்கள் கொண்டுள்ள இணக்கமான உறவுகளை தமிழ் மக்களின் அரசியல் பொருளாதார நலன்களைக் குறித்து பயன்படுத்த வேண்டும். 

இந்த அரசாங்கத்தின் காலம் 2020 ல் முடிவடைகின்றது. அதற்கு  இடைப்பட்ட காலத்துக்குள் இப்போது இருக்கின்ற அரசியல் யாப்பின் சட்ட எல்லைகளுக்கு உள்ளேயே நடைமுறையில் இருக்கின்ற மாகாண சபை முறையை முடிந்த அளவுக்கு வினைத்திறன் கொண்டதாக அமையும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.