ஆடுகளை மிகவும் சூட்சுமமாக திருடிய இருவரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீள்குடியேற்ற கிராமமான மஜ்மா கிராமத்தில் ஆடுகளை திருடிச்சென்ற குருணாகல் பகுதியைச் சேர்ந்த இரு சந்தேக நபர்களையே பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்த நபர்களிடமிருந்து திருடிய 28 ஆடுகளையும் திருடுவதற்காக பயன்படுத்திய வாகனத்தினையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

நேற்று காலை மஜ்மா கிராமத்தில் உள்ள தனது ஆட்டு பண்ணையில் இருந்து ஆடுகள் திருடப்பட்டுள்ளதாக ஆட்டு உரிமையாளரினால் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில் குறித்த முறைப்பாட்டையடுத்து, மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சர் ஜயசிங்கவின் ஆலோசனையில் வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சர் விதானகேயின் வழிகாட்டலில் செயற்பட்ட வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹேரத் மற்றும் குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஹயானகுமார அடங்கலான குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஆடுகளை திருடி குருணாகல் பகுதிக்கு கொண்டு செல்வதற்கு தயாரான நிலையில் இருந்தவேளை சந்தேக நபர்கள் இருவரை கைது பொலிஸார் கைதுசெய்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து  28 ஆடுகளையும் அதற்கு பயன்படுத்திய வாகனத்தினையும் பொலிஸார் கைப்பற்றினர்.

ஆடுகளை திருடிய சந்தேக நபர்களுக்கு இப்பகுதியில் வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹேரத் மேலும் தெரிவித்தார்.