மத்துகம வோகன் தோட்டம் கீழ் பிரிவில் கடந்த வருடம் மே மாதம் ஏற்பட்ட மண்சரிவினால் பாதிப்புக்குள்ளான 36 குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டத்துக்குரிய நீதியைப் பெற்றுக் கொடுப்பதில் ஏற்படும்வரும் தாமதம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

மண்சரிவினால் பாதிப்புக்குள்ளான குடும்பங்களுக்கு மத்துகம பிரதேச செயலகத்தினால் தற்காலிக கூடாரங்கள் அமைத்துக் கொடுத்து தங்க வைக்கப்பட்டு பல போராட்டங்களின் பின்னர் தோட்ட நிர்வாகத்தினால் காணி ஒதுக்கப்பட்டு மலைநாட்டு புதிய கிராம உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் தலா 10 லட்சம் ரூபாய் செலவில் இலவசமாக அமைத்துக் கொடுக்கும் வீட்டு திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

வீட்டு திட்டத்துக்கான நிதி மத்துகம பிரதேச செயலகத்துக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டு பிரதேச செயலகத்தினால் கட்டம் கட்டமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி பகிர்ந்தளிக்கப்பட்டு பிரதேச செயலகத்தின் மேற்பார்வையில் அவரவர் விருப்புக்கு ஏற்ற வடிவில் வீடுகள் அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டது. 

இருந்தபோதிலும் நிதியை பெற்றுக் கொடுப்பதில் ஏற்பட்டுவரும் தாமதம் காரணமாக துரிதகதியில் வீட்டைப் பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பயனாளிகள் தெரிவித்துள்ளனர். 

இவர்கள் தங்கியிருந்த கூடாரங்களும் பழுதடைந்து தங்கியிருக்க முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து ஆபத்து மத்தியில் மீண்டும் லயன் குடியிருப்புகளிலேயே தங்கியிருக்க வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த 6 ஆம் திகதி பெய்த கடும் மழையினால் இங்கு மீண்டும் மண்சரிவு ஏற்பட்டு குடியிருப்பாளர்கள் பெறும் அல்லோலகல்லோலப்பட்டுக் குடியிருப்புகளை விட்டு வெளியேறி அயளவர்களின் வீடுகளில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

எனவே வீடுகளை துரிதகதியில் பூர்த்தி செய்து கொண்டு ஆபத்திலிருந்து மீண்டு குடியேறும் பொருட்டு வீட்டுக்குரிய நிதியை தாமதப்படுத்தாது பெற்றுக்கொடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் இல்லையேல் மண் சரிவு ஏற்பட்டு பெரும் அனர்தத்திற்குள்ளாகும் நிலையே ஏற்படும் என பயனாளிகள் தெரிவித்துள்ளனர்.