(இரோஷா வேலு) 

நீராட வேண்டாம் என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ள தங்கல்ல ரகவ கடற்பரப்பில் நீராட சென்ற ஜேர்மன் நாட்டு பிரஜையொருவர் பரிதாபகரமான முறையில் நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

இவர் நேற்று  ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் கடலில் நீராடிக் கொண்டிருந்த வேளையிலேயே இவ்வாறு நீரில் மூழ்கி பலியாகியுள்ளார். 

ஜேர்மான் நாட்டைச் சேர்ந்த 35 வயதுடைய ஸ்டீவன் மார்க் என்பவரே இவ்வாறு மரணித்தவராவார். 

இலங்கைக்கு இம்மாதம் முதல் வாரமளவில் சுற்றுலா வந்துள்ள இவர் தங்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தனியார் விடுதியொன்றில் தங்கியிருந்துள்ளார்.  

இந்நிலையில் நேற்று   மாலை யோகா பயிற்சிக்காக சென்றுவருவதாக தெரிவித்து விட்டு, எச்சரிக்கை பலகையின் அறிவுறுத்தலை மீறி ரகவ கடற்பரப்பில் நீராட சென்ற வேளையிலேயே நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாக ஆரம்ப விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.