யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியிலுள்ள வியாபார நிலையம் ஒன்றின் மீது வாள்வெட்டு வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தி தப்பிச் சென்றுள்ளது. 

2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் இந்தத் தாக்குதலை நடத்திவிட்டு கடை உரிமையாளரை மிரட்டிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கோண்டாவில் உப்புமடம் சந்தியிலுள்ள வியாபார நிலையம் ஒன்றின் மீதே நேற்றிரவு இரவு 7.15 மணியளவில் இத் தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வியாபார நிலையத்துக்குள் புகுந்த கும்பல் பொருள்களை அடித்துச் சேதப்படுத்தியதுடன், பல சரக்குப் பொருள்களை சிந்தி சேதாரப்படுத்திச் சென்றது. அத்துடன், வியாபார நிலையத்தின் முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியையும் அடித்துச் சேதப்படுத்திவிட்டு கும்பல் தப்பித்தது என்று கடையின் உரிமையாளர் தெரிவித்தார்.

சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது. சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டதையடுத்து அங்கு வந்த கோப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.