(எம்.மனோசித்ரா)

ரூபாவின் வீழ்ச்சியினை கட்டுப்படுத்த எம்மால் முடியும் என்று குறிப்பிடும் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது தரப்பினரிடம்  அவ்வழிமுறையினை வினவும்போது அவர்கள் பிறிதொருவரை சுட்டிக்காட்டும் அளவிற்கு அவர்களது பொருளாதார நிபுணத்துவம் காணப்படுகிறது எனத் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, இவர்களிடம் மீண்டும் நாட்டை பொறுப்பளிப்பது நகைப்பிற்குரியது என குறிப்பிட்டார்.

இடைக்கால அரசாங்கம், ஜனாதிபதி வேட்பாளர் மற்றும் பொது வேட்பாளர் என தற்போது எமது நாட்டு அரசியலில் பல்வேறு விடயங்கள் பேசப்படுகின்றன. ஆட்சியாளர்கள் அனைவரும் நாட்டு மக்களுடைய பிரச்சினைகளை ஒரு புறம் ஒதுக்கிவிட்டு தத்தமது தனிப்பட்ட பிரச்சினைகளை தீர்ப்பதனையே நோக்கமாகக் கொண்டு செயற்படுகின்றனர்.

மேலும் அரசாங்கத்திலிருந்து விலகிய சுதந்திரக் கட்சியின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் மைத்திரி - மஹிந்த ஆகிய இருவரையும் இணைத்து இடைக்கால அரசாங்கம் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் ஏதேனும் பெற்றுக் கொள்ளலாம் என  எண்ணிக் கொண்டிருக்கின்றனர் எனவும் குற்றஞ்சாட்டினார்

ஜே.வி.பி காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.