மட்டக்களப்பு வெளிச்ச வீட்டில் ஏறி பார்வையிடுவதற்கு தடை

மட்டக்களப்பு மாநகர சபையினால் பராமரிக்கப்பட்டுவரும் மட்டக்களப்பு வெளிச்ச வீட்டில் (லைட் ஹவுஸில்) சுற்றுலா பயணிகள், பொது மக்கள் ஏறி பார்வையிடுவதற்கு மட்டக்களப்பு மாநகர சபையினால் சுமார் கடந்த ஒரு வருடங்களாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதற்கான காரணம் கடந்ந காலங்களில் மேற்படி வெளிச்ச வீட்டில் ஏறும் பொது மக்களில் சிலரும், இளைஞர்களும் வெளிச்ச வீட்டு உச்சியில் ஏறி கொண்டு தான் தற்கொலை செய்யப்போவதாக மிரட்டுவதாகவும், சிலர் குடிபோதையில் வெளிச்ச வீட்டில் ஏறி அங்கு இருக்கின்ற மின் குமிழ்களை சேதமாக்குவதாகவும் இதன் பின்னரே வெளிச்ச வீட்டில் பொது மக்களும், சுற்றுலா பயணிகளும் ஏறுவதற்கு தடை விதிக்கப்பட்டதாகவும் இதற்கு முன்னர் இதை பொது மக்கள் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டு வந்ததாகவும் தெரியவருகிறது. 

இருந்த போதிலும் குறித்த வெளிச்ச வீட்டை சுற்றுலா பயணிகள் அல்லது பொது மக்கள் அவசியம் பார்வையிட வேண்டுமென்றால் மட்டக்களப்பு மாநகர சபைக்கு சென்று அங்கு அனுமதியை பெற்ற பின்னர், அதற்கான மாநகர அதிகாரிகளுடன் தற்போது வெளிச்ச வீட்டை பார்வையிட முடியும் எனவும் இதற்கான திறப்பு மட்டக்களப்பு மாநகர சபையிலேயே உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இருந்தாலும் மிகப் பழைமை வாய்ந்த வரலாற்று பொக்கிஷமாக கருதப்படும் இவ்வெளிச்ச வீட்டை பொலிஸார் மற்றும் பாதுகாப்பு பிரிவினரின் உதவியுடன் பொது மக்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோர் பார்வையிடுவதற்கு சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். 

(பழுலுல்லாஹ் பர்ஹான்)