இந்தியாவின், அரியானா மாநிலத்தில் 4 நாட்களாக பூட்டியிருந்த வீட்டில் 4 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டத்தில் சூரஜ்குந்த் தானா பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் வீட்டை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அங்கு தனித்தனி அறைகளில் 4 பேர் சடலமாக தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனையடுத்து 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இறந்த 4 பேர் பற்றி மேற்கொண்ட விசாரணையில், மீனா (42), பீனா (40) ஜெயா (39) மற்றும் அவருடைய தம்பி பிரதீப் (37) என்பது தெரியவந்தது.

அவர்களில் யாருக்கும் இதுவரை திருமணம் ஆகவில்லை. பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் யாருடனும் அவர்கள் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்ததில்லை.

அவர்களின் தந்தை கடந்த ஆண்டு உயிரிழந்துவிட்டார். அவரை தொடர்ந்து 5 மாதங்களுக்கு முன்னதாக தாயும் இறந்துள்ளார். உடல்களில் இருந்து துர்நாற்றம் வீசியதால், அவர்கள் இறந்து 3 முதல் 4 நாட்கள் ஆகியிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறந்ததற்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில், பணப் பிரச்னை காரணமாக தற்கொலை முடிவை எடுத்திருப்பார்கள் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்