பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் உள்ள தூதரகத்தில் கொல்லப்பட்டுள்ளதை சவுதி அரேபியா ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அவரது உடலை தங்களிடம் ஒப்படைக்குமாறு பத்திரிகையாளர்களின் நண்பர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

துருக்கி அராபிய ஊடக ஸ்தாபனத்தின் நண்பரும் ஜமாலின் நண்பருமான டுரான் கிஸ்லசி கொல்லப்பட்ட ஊடகவியலாளரின் உடலை ஒப்படைக்குமாறு சவுதிஅரேபியாவை கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜமாலை எங்களிடம் ஒப்படையுங்கள் நாங்கள் அவரிற்கு இறுதிமரியாதை செலுத்தவேண்டும் இதன் மூலம் அவரை மதிப்பவர்களும் உலக தலைவர்களும் இறுதிமரியாதை செலுத்துவதற்காக துருக்கிக்கு வரமுடியும் என அவர்வேண்டுகோள் விடுத்துள்ளார்.

18 நாட்களிற்கு முன்னர் ஈவிரக்கமற்ற படுகொலையொன்று இடம்பெற்றுள்ளது, ஜமால் எவ்வித பாதிப்புமின்றி மீண்டும் எங்களிடம் வருவார் என நாங்கள் எதிர்பார்த்தோம் எனினும் மூன்று நாட்களின் பின்னர் நாங்கள் நம்பிக்கை இழந்துவிட்டோம் என டுரான் கிஸ்லசி தெரிவித்துள்ளார்.

நாங்கள் ஜமால் விவகாரத்தில் நீதி வழங்கப்படவேண்டும் என எதிர்பார்க்கின்றோம், 18 சந்தேகநபர்கள் உள்ளனர் என தெரிவிப்பது மாத்திரம் போதுமானதல்ல இந்த கொலைக்கான உத்தரவை வழங்கியவர்கள் யார் என்பதை அறிய விரும்புகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.